சீனாவில் இந்த மாதம் 56,000 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சீனாவின் மிகப்பெரிய நகரமான ஷாங்காய் நகரின் பெரும்பாலான பகுதிகளில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, ஷாங்காய் நகரமெங்கும் வெகுஜன கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகின்றது.
புடாங் மாவட்டம் மற்றும் அருகிலுள்ள பகுதிகள், திங்கள் முதல் வெள்ளி வரை பொதுமுடக்கம் அமுலில் இருக்கும் என கூறப்படுகின்றது.
பொதுமக்கள் தங்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பதுடன், வெளி உலகத்துடன் எந்த தொடர்பும் இருக்கக்கூடாது என்பதற்காக சோதனைச் சாவடிகளில் பொருட்கள் கொண்டுவந்து டெலிவரி செய்யப்படும்.
மேலும், அலுவலகங்கள் மற்றும் அத்தியாவசியம் அல்லாத அனைத்து வணிகங்களும் மூடப்படும்.
அத்துடன் பொது போக்குவரத்தும் நிறுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2.6 கோடி மக்கள் தொகை கொண்ட நகரை, இரண்டாகப் பிரிக்கும் ஹுவாங்பு ஆற்றின் மறுபக்கம் இருக்கும் பகுதியில் அடுத்த வாரத்திலிருந்து பொதுமுடக்கம் அமுல்படுத்தப்படும்.
சீன அரசின் ‘பூஜ்ஜிய கொரோனா கொள்கை’யின்படி, இவ்வாறு கடும் கட்டுப்பாட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
கொரோனா பரவல் அதிகரித்தால், அதனை கட்டுப்படுத்த தவறிய அதிகாரிகளுக்கு தான் தண்டனை அளிக்கப்படும் எனவும் கூறப்படுகின்றது.
அதேவேளை சீனாவில் 87 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்ட கொரோனா பாதிப்பு தகவலின்படி, ஷாங்காய் நகரில் 47 பேருக்கு மட்டுமே புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.