சிவனுக்குரிய வழிபாடுகளில் முக்கிய இடம்பெறும் பிரதோஷம் !!

0

சிவனுக்குரிய வழிபாடுகளில் சிவராத்திரியும் பிரதோஷமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன. சிவன் ஆலகால விஷத்தை உண்டு தூங்காமல் இருந்த இரவே சிவராத்திரி என்று வழங்கப்படுகிறது.

விஷமுண்ட சிவன் நந்தியின் கொம்புகளுக்கு இடையே நடனம் புரிந்தார். விஷம் உண்ட வேளை பிரதோஷ வேளை என்றும் கூறப்படுகிறது. உலகை காக்கும் பொருட்டு நன்மையை நமக்குத் தந்து தீமையான விஷத்தை தான் ஏற்றுக் கொண்டார் இறைவன். இவ்வாறு உலகை காத்த உத்தமனான இறைவனை மனமுருக வேண்டி வழிபடும் தினமே பிரதோஷம். பிரதோஷம் நித்ய பிரதோஷம் , மாதப் பிரதோஷம், மஹா பிரதோஷம் என்று மூன்று வகைப்படும்.

தினம் தோறும் மாலை 4.30 மணி முதல் 6. 00 மணி வரையிலான காலம் நித்ய பிரதோஷ காலம் எனப்படும். இந்த சமயத்தில் இறைவனை வழிபடுவது மிகவும் சிறப்பு ஆகும். மாதம் தோறும் வரும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான காலம் மாதப் பிரதோஷம் எனப்படும்.

மஹா பிரதோஷம் : மாதங்களில் தேய்பிறை அல்லது வளர்பிறை திரயோதசியுடன் சனிக்கிழமை கலந்து வந்தால் அது மஹா பிரதோஷம் என்று வழங்கப்படுகிறது. இவை சித்திரை வைகாசி, ஐப்பசி கார்த்திகை மாதங்களில் வந்தால் மிகவும் உத்தமம் என்று புராணங்களும் ஆகமங்களும் கூறுகின்றன.

சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் சனி பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த சனி பிரதோஷம் இன்று சிறப்பாக அனைத்து சிவன் கோவில்களிலும் கொண்டாடப்படுகிறது. சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனி பிரதோஷம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here