கோவிட் சிகிச்சைக்காக கண்டுபிடிக்கப்பட்டுள்ள மாத்திரை ஒன்றிற்கு கனடா சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்துள்ளது.
கோவிட் தொற்றைத் தவிர்ப்பதற்காக தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடித்துள்ளனர்.
இந்நிலையில் புதிது புதிதாக மரபணு மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ்கள் தோன்றி அச்சுறுத்தி வருகின்றன.
ஒரு பக்கம் கொரோனா தொற்றைத் தவிர்ப்பதற்காக தடுப்பூசிகள் கொடுக்கப்பட்டு வருகின்றது.
தடுப்பூசிகளையும் மீறி Omicron என்றொரு வகை புதிய மரபணு மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் தோன்றி அறிவியலாளர்களையே குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், தற்போது கொரோனா தொற்றியவர்களைக் காப்பாற்றும் முயற்சியாக மருந்துகளைக் கண்டறியும் முயற்சியில் நிறுவனங்கள் இறங்கியுள்ளன.
அவ்வகையில், பைசர் நிறுவனம், கொரோனா சிகிச்சைக்காக, பாக்ஸ்லோவிட் (Paxlovid) என்னும் மருந்து ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது.
மாத்திரை வடிவிலான இந்த மருந்து, SARS-CoV-2 வகை கொரோனா வைரஸுக்கு எதிராக போராடும் திறனை உடலுக்கு அளிப்பதுடன், தொற்றால் உருவாகும் அறிகுறிகளைக் குறைத்து, ஒருவர் நோய்வாய்ப்பட்டிருக்கும் காலகட்டத்தையும் குறைக்க உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த மருந்தை பல மாதங்கள் சோதனை முறையில் பயன்படுத்திப் பார்த்ததில், அது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் மற்றும் உயிரிழக்கும் அபாயத்தை 89 சதவிகிதம் குறைப்பது தெரியவந்துள்ளதாக பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆகவே, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த பாக்ஸ்லோவிட் மாத்திரையை கோவிட் சிகிச்சைக்குப் பயன்படுத்துவதற்கு, கனடா சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்துள்ளது.