கொவிட் தொற்றினை கட்டுப்படுத்த முடியாமல் தோல்வியடைந்த இலங்கை!

0

அரசாங்கம் குறுகியகால இலக்குகளுக்கு முக்கியத்துவம் வழங்கியதுடன் நாட்டின் சுகாதார நெருக்கடியைக் கையாள்வதில் தோல்வியேற்பட்டுள்ளமை தெளிவாகப் புலப்பட்ட போதிலும், உரிய தரப்பினரிடம் பொருத்தமான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளத் தவறியமையின் விளைவாக கொவிட் – 19 வைரஸ் பரவலைக் கையாள்வதில் கடந்த 2020 ஆம் ஆண்டில் ஆரம்பத்தில் பெற்ற வெற்றியை தூரமாகத் தூக்கியெறிந்திருக்கின்றது என்று சுகாதாரக்கொள்கைகளுக்கான நிலையத்தின் தலைவர் வைத்தியநிபுணர் ரவி ரன்னன் எலிய சுட்டிக்காட்டியுள்ளார்.

‘இழப்புக்களை மதிப்பீடு செய்தல் : ஆபத்திலிருக்கும் ஒரு ஜனாதிபதியின் மரபு’ என்ற தலைப்பில் தேசிய ஆங்கிலப்பத்திரிகை ஒன்றில் வெளியாகியிருக்கும் கட்டுரையை மேற்கோள்காட்டி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அக்கட்டுரையில் கொவிட் – 19 வைரஸ் பரவல் காரணமாகத் தற்போது நாடு எதிர்கொண்டிருக்கும் நெருக்கடி மற்றும் அதனைக் கையாள்வதில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக தற்போதைய தரவுகளை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில் இவ்வாண்டின் முடிவில் இலங்கையில் 20,000 ஐ விடவும் அதிகமான கொவிட் – 19 மரணங்கள் இலங்கையில் பதிவாகும் என்றும் தடுப்பூசி வழங்கல் நடவடிக்கையைப் பொறுத்தமட்டில், தற்போது வழங்கப்பட்டுவரும் தடுப்பூசிகளை இரண்டு மடங்காக அதிகரிக்கவேண்டும் என்றும் வைத்தியநிபுணர் ரவீந்திர ரன்னன் எலியவினால் கூறப்பட்ட விடயமும் அக்கட்டுரையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வைத்திய நிபுணர் ரவி ரன்னன் எலியவின் டுவிட்டர் பதிவில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

‘இதில் கூறப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் விசேட அவதானம் செலுத்தவேண்டும். குறுகியகால இலக்குகளுக்கு முக்கியத்துவம் வழங்கியதுடன் நாட்டின் சுகாதார நெருக்கடியைக் கையாள்வதில் தோல்வியேற்பட்டுள்ளமை தெளிவாகப் புலப்பட்ட போதிலும், உரிய தரப்பினரிடம் பொருத்தமான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளத் தவறியமையின் விளைவாக கொவிட் – 19 வைரஸ் பரவலைக் கையாள்வதில் கடந்த 2020 ஆம் ஆண்டில் ஆரம்பத்தில் பெற்ற வெற்றியை அரசாங்கம் தூக்கியெறிந்திருக்கின்றது. அத்தோடு கோட்டாபய ராஜபக்ஷவின் மரபும் தோல்விகண்டிருக்கிறது.

இது தமக்குத் தாமாகவே ஏற்படுத்திக்கொண்ட நெருக்கடியாகும். தமது ஆதரவாளர்களின் குறுகியகால இலக்குகளை விடவும் நீண்டகால நலன்களுக்கு முக்கியத்துவம் அளித்துச்செயற்படக்கூடிய இயலுமையானது வலுவானதும் நியாயமானதுமான தலைமைத்துவத்திற்குரிய முக்கிய குணாம்சமாகும்.

அத்தோடு குறித்தொரு விடயத்தைக் கையாள்வதில் பின்பற்றப்பட்டுவரும் பொறிமுறை பொருத்தமானதாக அமையவில்லை என்பதை நிரூபிக்கும் வகையிலான சான்றாதாரங்கள் காணப்படும் பட்சத்தில் அதற்குப் பதிலாகப் புதிய நுட்பங்களை சிந்திக்க மற்றும் தவறுகளைத் திருத்திக்கொள்கின்ற ஆற்றலும் சிறந்த தலைமைத்துவத்திடம் காணப்படவேண்டும்.

அரசாங்கத்தின் தவறுகளைத் திருத்துவதற்கு எதிர்க்கட்சி எதனையும் செய்யவில்லை. அரசாங்கமும் அதன் ‘நிபுணர்களும்’ போதுமானளவு அவர்களது கண்களையும் காதுகளையும் மூடிக்கொண்டார்கள்.

துரதிஷ்டவசமாக இதன் விளைவுகளை எதிர்கொள்ளவேண்டிய நிலையில் நாட்டுமக்கள் இருக்கின்றார்கள்’ என்று ரவி ரன்னன் எலிய அவரது டுவிட்டர் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here