கொழும்பு வாழ் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

0

அபாயம் மிக்க பி.1.617.2 டெல்டா வைரஸ் தொற்றுக்குள்ளானோர் இனங்காணப்பட்ட கொழும்பு – தெமட்டகொட பிரதேசம் கடந்த சனிக்கிழமை முதல் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டிருந்த பகுதியாகும் என கொழும்பு மாநகரசபையின் தொற்று நோயியல் நிபுணர் வைத்தியர் தினூகா குருகே தெரிவித்தார்.

இப்பிரதேசத்தில் பெற்றுக் கொள்ளப்பட்ட மாதிரிகளில் சந்தேகத்திற்கிடமான தன்மையை அவதானித்த பின்னரே அதனை முடக்குவதற்குகொழும்பு மாநகரசபை மருத்துவ அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த வியாழக்கிழமை கொழும்பு – தெமட்டகொடை பிரதேசத்தில் டெல்டா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில், அது குறித்த மேலதிக தகவல்கள் தொடர்பில் வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் கொழும்பு 1 – 15 வரையான பகுதிகளில் வாழ்பவர்களின் எவருக்கேனும் தொற்று அறிகுறிகள் காணப்பட்டால் துரிதமாக பி.சி.ஆர். பரிசோதனைகளை செய்து கொள்ளுமாறும், இவற்றில் சந்தேகத்திற்கிடமாக மாரிதிகளை வரிசைப்படுத்தி துரிதமாக முடிவுகளைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகரசபையினால் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட குறித்த பிரதேசம் கடந்த 12 ஆம் திகதி சனிக்கிழமை முதல் தனிமைப்படுத்தப்பட்டிருந்தது. இப்பகுதியில் பெருமளவான பி.சி.ஆர். பரிசோதனைகள் குறுகிய காலத்திற்குள் முன்னெடுக்கப்பட்டன. இதன் ஊடாகவே டெல்டா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் இனங்காணப்பட்டனர்.

இதனையடுத்து பொரளை உள்ளிட்ட கொழும்பு மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் பரந்தளவில் பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. எனவே குறித்த பகுதிகளில் குறிப்பாக கொழும்பு 1 – 15 வரையான பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஏதேனுமொரு தொற்று அறிகுறி காணப்பட்டால் துரிதமாக பி.சி.ஆர். பரிசோதனைகளை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

இதற்காக நேற்று வெள்ளிக்கிழமை கொட்டாஞ்சேனை புனித பெனட்டிக் வீதி, சுவர்ணசைத்திய வீதி, டீன்ஸ் வீதி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவு மற்றும் தெமட்டகொடை, அரமாய வீதியின் 200 ஆவது தோட்டம் ஆகிய பகுதிகளிலும், இன்று சனிக்கிழமை மஹவத்தை வீதி 312 ஆவது தோட்டத்திலும், வெள்ளவத்தையிலுள்ள வெலுவனராம விகாரையிலும் காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

இவ்வாறு பி.சி.ஆர். பரிசோதனைகளை செய்து கொள்பவர்களது முடிவுகளை 8 – 10 மணித்தியாலங்களுக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் தினூகா குருகே தெரிவித்தார்.

டெல்டா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்துவதற்கு சுமார் 5 நாட்கள் தொடக்கம் ஒரு வாரம் வரையான காலம் செல்லும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறெனில் தற்போது இனங்காணப்பட்டுள்ள தொற்றாளர்களிடமிருந்து இந்த வைரஸ் சமூகத்திற்குள் பரவவில்லை என்பதை எவ்வாறு உறுதிப்படுத்த முடியும் என்று வினவியதற்கு பதிலளித்த அவர்,

‘இம்முறை மாத்திரமே சந்தேகத்திற்கிடமான பி.சி.ஆர். மாதிரிகளை வரிசைப்படுத்துவதில் ஒருவார காலம் தேவைப்பட்டது. வைரஸ் மாறுபாட்டை கண்டறிவதற்கான பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுக்கும் பிரிவும் காணப்படுகிறது. குறித்த பிரிவினால் சந்தேகத்திற்கிடமான மாதிரிகளை துரிதமாக வரிசைப்படுத்தி துரிதமாக அதன் முடிவுகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.’ என்று குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here