கையை மீறும் கொரோனா? சீனா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

0

உலகமே டெல்டா கொரோனாவை எதிர்கொள்ளப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், வரும் காலங்களில் இன்னும்கூட புதிய உருமாறிய கொரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளதாக பேட்வுமன் என்று அழைக்கப்படும் சீனாவின் மூத்த ஆய்வாளர் ஷி ஜெங்லி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் பரவ தொடங்கிய கொரோனா பாதிப்பு, மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. எந்தவொரு உலக நாடும் இதுவரை கொரோனாவில் இருந்து மீளவில்லை.

அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளும் சரி, இதர வளரும் அல்லது பின்தங்கிய நாடுகளும் சரி கொரோனா பாதிப்பால் மிக இழப்புகளைச் சந்தித்துள்ளது.
கெயில் திட்டத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்பு – திமுக தேர்தல் அறிக்கையை நினைவூட்டும் வைகோ

மற்ற பேரிடர்களைப் போல இல்லாமல், கொரோனா வைரஸ் அலை அலையாகத் தாக்குகிறது. அதாவது ஒரு நாட்டில் சில மாதங்கள் வைரஸ் பாதிப்பு குறைந்திருக்கும். அப்போது கொரோனா முடிந்துவிட்டதாகக் கருதுவோம். அப்போது திடீரென புதிய உருமாறிய கொரோனாவால் அடுத்த அலை ஏற்படும். முதலில் பிரிட்டன் நாட்டில் தோன்றிய ஆல்பா வகை கொரோனாவால் மோசமான பாதிப்புகள் ஏற்பட்டன. அடுத்து இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட டெல்டா கொரோனாவால் மோசமான பாதிப்புகளை உலக நாடுகள் எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் குறித்துப் பல ஆண்டுகளாகத் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வரும் பேட்வுமன் என்று அழைக்கப்படும் சீனாவின் மூத்த ஆய்வாளர் ஷி ஜெங்லி இது குறித்துக் கூறுகையில், “புதிய உருமாறிய கொரோனா வகைகள் தோன்றிக் கொண்டே தான் இருக்கும். அதை யாராலும் தடுக்க முடியாது. இதற்காக நாம் பீதியடையக் கூடாது. ஆனால் நீண்ட காலத்திற்கு வைரஸுடன் இணைந்து வாழ நாம் தயாராக வேண்டும்.

கொரோனா வைரஸ் மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுத்துவிட்டது. அது மனிதர்கள் மத்தியில் வேகமாகப் பரவ தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருக்கிறது. அதேநேரம் தடுப்பூசிகள் மிக மிக அத்தியாவசியமானவை. கொரோனா வைரஸால் மக்கள் பாதிக்கப்படுவதைத் தடுப்பூசிகளால் தடுக்க முடியாது என்றாலும்கூட, தீவிர கொரோனா பாதிப்புகளையும் உயிரிழப்புகளையும் அது கணிசமாகவே குறைக்கிறது” என்று அவர் குறிப்பிட்டார்.

இப்போது அனைத்து நாடுகளுமே டெல்டா கொரோனாவை கட்டுப்படுத்தவே மிகப் பெரிய போராட்டத்தை நடத்தி வருகிறது. உலகின் பல்வேறு நாடுகளிலும் டெல்டா கொரோனா பாதிப்பு மிக மோசமான ஒன்றாக மாறி வருகிறது. இதைக் கட்டுப்படுத்தவே ஆய்வாளர்கள் தற்போது தொடர் ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளனர். அதேநேரம், டெல்டா கொரோனாவை போலவே புதிய உருமாறிய கொரோனா உருவாக உள்ள வாய்ப்புகள் குறித்தும் தொடர்ச்சியான ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. டெல்டா கொரோனா மின்னல் வேகத்தில் பரவக்கூடியதே அதில் இருக்கும் மிகப் பெரிய ஆபத்து என அமெரிக்காவின் லா ஜொல்லா இன்ஸ்டிடியூட் ஃபார் இம்யூனாலஜியின் ஆய்வாளர் ஷேன் க்ரோட்டி குறிப்பிட்டார். சீனாவில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைக் காட்டிலும் டெல்டா கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 1200 மடங்கு கொரோனா வைரஸை அதிகமாக தங்கள் நாசியில் எடுத்துச் செல்கின்றனர்.

சீனாவில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்த ஏழு நாட்கள் வரை ஆகும். ஆனால், டெல்டா கொரோனா வெறும் இரண்டு முதல் மூன்று நாட்களில் தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தும். அதாவது கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பாற்றலை உருவாக்க நோயெதிர்ப்பு மண்டலத்திற்குக் குறைவான நேரமே இருக்கும். இத்துடன் நிற்காமல் டெல்டா கொரோனா பாதிப்பு மேலும் டெல்டா பிளஸ் கொரோனாவாக உருமாறியுள்ளது.

டெல்டா பிளஸ் கொரோனா இம்யூன் எஸ்கேப் என்ற ஆபத்தான ஆற்றலைக் கொண்டுள்ளது. அதாவது ஏற்கனவே வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் தோன்றும் ஆன்டிபாடிகளிடம் இருந்து தப்பிக்கும் ஆற்றல் கொண்டது. இதனால் ஏற்கனவே வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பித்தவர்களுக்கும் கூட மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இந்த டெல்டா பிளஸ் கொரோனாவை இந்தியா கவலைக்குரிய கொரோனா வகையாகப் போட்டியிட்டுள்ளது.

பொதுமக்கள் எந்தளவு கொரோனா வேக்சின்களை போடாமல் இருக்கின்றனரோ அந்தளவுக்கு நமக்குச் சிக்கல் தொடர்வதாக அமெரிக்காவின் மூத்த தொற்றுநோய் ஆய்வாளர் டாக்டர் அந்தோனி ஃபாசி தெரிவித்துள்ளார். ஏனெனில் தடுப்பூசி போடாத மக்கள் மத்தியில் தான் புதிய உருமாறிய கொரோனா பாதிப்பு தோன்றுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

என்னதான் சீனாவில் முதல் முதலில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டாலும், கடுமையான ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் மூலம் அந்நாடு மிக விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டது. கடந்த ஆண்டு பிற்பகுதியில் உலகமே கொரோனா பாதிப்பு காரணமாகத் திண்டாடிக் கொண்டிருந்த சமயத்தில், சீனா மட்டும் இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்தது. பார்ட்டிகள், பட்டமளிப்பு விழா என கிட்டதட்ட வழக்கமான அனைத்து நடவடிக்கைகளையும் சீனா தொடங்கியது. ஆஸ்திரேலியாவிலும் இதே நிலைதான். கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் மூலம் வைரஸ் பாதிப்பைக் குறைத்திருந்தது. ஆனால் இந்த முறை டெல்டா கொரோனா பாதிப்பால் இந்த நாடுகளில் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளன. இதன் மூலம் ஒரு விஷயம் நமக்குத் தெளிவாகத் தெரிகிறது. அதாவது கொரோனா வேக்சினை 100% அனைத்து மக்களுக்கும் செலுத்தவில்லை என்றால் வைரஸ் பாதிப்பை என்றைக்கும் நாம் கட்டுப்படுத்த முடியாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here