குழந்தைகள் பொய் சொல்கிறார்களா?

0

பெற்றோரின் நடவடிக்கைகள், சுபாவங்களை பின்பற்றித்தான் குழந்தைகள் வளரும். அவர்களின் வளர்ச்சியில் பெற்றோரின் பங்கு இன்றியமையாதது. சில பெற்றோர் குழந்தைகளை தங்களுக்கு சாதகமாக நடந்து கொள்வதற்கு பழக்கப்படுத்திவிடுவார்கள்.

நெருங்கிய உறவினர்கள் தங்களை பற்றி குழந்தைகளிடம் ஏதேனும் விசாரித்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள். அதற்கு ஏதுவாக குழந்தைகளை பேசுவதற்கு கற்றுக்கொடுப்பார்கள். அதுதான் குழந்தைகள் பொய் சொல்ல கற்றுக்கொள்ளும் பிறப்பிடமாக அமைந்துவிடுகிறது. நாளடைவில் மற்றவர்களிடம் மட்டுமின்றி பெற்றோர்களிடமும் சூழலுக்கு தக்கபடி பொய் பேசுவதற்கு குழந்தைகள் பழகிவிடுவார்கள். அதற்கு பெற்றோர் இடம் கொடுக்கக்கூடாது. குழந்தைகள் பொய் சொல்கிறார்கள் என்பதை ஆரம்பத்திலேயே கண்டு பிடித்துவிட்டால் அந்த பழக்கத்தில் இருந்து எளிதாக மீட்டுவிடலாம்.

குழந்தைகள் பொய் சொல்லும்போது சம்பந்தப்பட்டவர்களின் கண்களை நேரடியாக பார்த்து பேச மாட்டார்கள். இதுதான் பொய் பேச தொடங்கும் ஆரம்பக்கட்டமாகும். அதனை கவனத்தில் கொள்ளாமல் விட்டால் வளர ஆரம்பித்ததும், கண்களை பார்த்தே பயமின்றி பொய் சொல்ல பழகிவிடுவார்கள். ஆதலால் குழந்தைகள் பேசும்போது அவர்களின் கண்களை பெற்றோர் உற்றுநோக்கி கவனிக்க வேண்டும். அப்போது எளிதாக அவர்கள் பொய் பேசுவதை கண்டுபிடித்துவிடலாம். ஆரம்பக்கட்டத்திலேயே இந்த வழிமுறையை கையாண்டால் பொய் பேசும் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளிவைத்துவிடலாம். பொய் சொல்வது என்னென்ன பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை விளக்கி புரிய வைக்க வேண்டும்.

அத்துடன் என்ன காரணத்திற்காக குழந்தைகள் பொய் சொல்கிறார்கள் என்பதையும் கண்டறிந்து, மீண்டும் அதுபோல் தவறு செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளின் உடல் மொழியை வைத்துகூட அவர்கள் பொய் சொல்வதை கண்டறிந்துவிடலாம். அப்படி பொய் பேசும்போது வழக்கமான உடல் மொழியில் இருந்து அவர்களின் செயல்பாடு முற்றிலும் மாறிப்போய்விடும். சம்பந்தம் இல்லாமல் உடலை அசைத்து செய்த தவறை நியாயப்படுத்த முயற்சிப்பார்கள். ஏற்கனவே சொன்ன விஷயத்தையே, பயன்படுத்திய சொற்களையே திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருந்தால் அதுவும் பொய் சொல்வதன் வெளிப்பாடாகும். மூக்கு அல்லது தலையை சொறிந்த நிலையில் பேசுவதும் கூட பொய் சொல்வதற்கான அறிகுறிகளாகும்.

சொன்ன விஷயத்தையே திரும்ப திரும்ப சொல்வதிலும் முரண்பாடான கருத்தை முன்வைப்பார்கள். முன்பு சொன்ன விஷயத்தை நினைவில் வைத்திருக்காமல் வாய்க்கு வந்தபடி பேசவும் செய்வார்கள். ‘நாம் பொய்தான் சொல்கிறோம்’ என்ற உண்மையை ஒப்புக்கொள்வதற்கு முன்வர மாட்டார்கள். அவர்களின் மனதுக்கு அது கஷ்டமாக தெரியும். தன்னை தவறாக நினைத்துவிடுவார்களோ என்ற உள்ளுணர்வுதான் பொய்யை நியாயப்படுத்த முயற்சிக்கும்.

குழந்தைகள் இதுநாள் வரை உபயோகிக்காத சைகைகளை திடீரென பயன்படுத்தினால் அதுவும் பொய் கூறுவதற்கான அறிகுறியாக அமைந்திருக்கும். வழக்கத்தைவிட கண்கள் சட்டென்று சுழலும். திருதிருவென்று முழிப்பார்கள். அதனை உற்றுநோக்கினால் புன்னகையை வெளிப்படுத்தி சமாளிப்பார்கள். குறும்பாக சிரிக்கவும் செய்வார்கள். இவற்றை கொண்டே பொய் சொல்கிறார்கள் என்பதை எளிதாக கண்டுபிடித்து விடலாம். சிலரிடம் பொய் சொல்லும்போது பதற்றம் எட்டிப்பார்க்கும். மன குழப்பமும் உண்டாகும். அது அவர்களின் செயல்பாடுகளில் வெளிப்படும். துறுதுறுவென்று இருக்கும் குழந்தைகள் வழக்கத்தைவிட அமைதியாக இருந்தால் ஏதேனும் தவறு செய்திருக்கிறார்கள் என்று அர்த்தம். அதனை சமாளிக்க பொய் சொல்வதற்கு முயற்சிப்பார்கள். அதனை புரிந்து கொண்டு பெற்றோர் அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here