குழந்தைகள் ஏன் ஓடியாடி விளையாட வேண்டும் தெரியுமா?

0

நகர்புறங்களில் வசிக்கும் குழந்தைகள் மட்டுமல்ல கிராமப்புற குழந்தைகளும் நவீன கருவிகளுக்கு அடிமையாகிக்கொண்டிருக்கிறார்கள். செல்போன், லேப்டாப், டேப்லட், டி.வி., வீடியோ கேம் போன்றவைதான் அவர்களின் பிரதான பொழுதுபோக்காக விளங்குகின்றன. இது நல்லதல்ல என்கிறார்கள் குழந்தைகள் நல மருத்துவர்கள். குழந்தைகள் திறந்தவெளியில் ஓடியாடி விளையாட வேண்டும். ஏன் தெரியுமா?

வீட்டுக்குள்ளேயே முடங்கி திரை காட்சிகளில் மூழ்கி கிடக்கும் குழந்தைகளைவிட திறந்த வெளியில் விளையாடும் குழந்தை களின் பார்வைத்திறன் மேம்படும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. அதனால் திறந்த வெளியில் குழந்தைகள் விளையாடு வதற்கு பெற்றோர் அனுமதிக்க வேண்டும்.

வெளியே சென்று விளையாடும் அல்லது நேரத்தை செலவிடும் குழந்தைகள் மற்ற குழந்தைகளை விட சமூகம் சார்ந்த விஷயங்களை அதிகமாக தெரிந்து கொள்கிறார்கள், சமூகம் சார்ந்த சிந்தனை திறனும் அவர்களிடம் மேம்படுவதாக குழந்தைகள் நல நிபுணர்கள் கருதுகிறார்கள். தன்னம்பிக்கை, நடத்தை, கேள்விகளுக்கு பதிலளிக்கும் திறனும் அவர்களிடம் மேம்படுகிறது.

வீட்டுக்குள்ளேயே இருக்காமல் அடிக்கடி வெளியே சென்று வரும் குழந்தைகள் பெற்றோர்களை அதிகம் தொந்தரவு செய்வதில்லை. மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடும்போது அவர்களின் தனித் திறன், அறிவாற்றல் திறன் வளரும். சமூகத்தில் சிறந்த குழந்தையாக வளர்வார்கள்.

வீட்டுக்குள் நான்கு சுவர்களுக்குள் நேரத்தை போக்காமல் நண்பர்களுடன் நேரத்தை செலவிடும் குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படாது. சுற்றுச்சூழலை நுகர்ந்தபடி நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்வது, விளையாடுவது குழந்தைகளின் மன அழுத்தத்தை குறைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

குழந்தைகளுக்கு ஏற்படும் வைட்டமின் டி பற்றாக்குறையை வெளியே சென்று விளையாடுவதன் மூலம் ஈடுகட்ட முடியும். எதிர் காலத்தில் எலும்பு தொடர்பான பிரச்சினைகள், இதயநோய் பாதிப்புகளில் இருந்து குழந்தைகளை காப்பதற்கு வைட்டமின் டியின் பங்களிப்பு இன்றியமையாதது. சூரியன்தான் வைட்டமின் டியை வழங்கும் இயற்கை சக்தியாக இருப்பதால் அதன் வெளிச்சத்தில் குழந்தைகள் விளையாட வேண்டியது அவசியமானதாகும்.

வெளிக்காற்றை சுவாசித்தபடி ஜாக்கிங் செய்வது குழந்தைகளின் கவனிக்கும் திறனை அதிகரிக்கச்செய்யும் என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. ஏ.டி.எச்.டி. எனும் மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நோய் பெரியவர்களை மட்டுமல்ல குழந்தைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். வீடு மற்றும் பள்ளிக்கூடத்தில் கவனமின்றி செயல்படுவது, மற்றவர்களுடன் பேச மறுப்பது, பொருட்களை எங்காவது மறந்து வைப்பது, திடீரென கூச்சலிடுவது போன்றவை இந்த நோய்க்கான அறிகுறிகளாகும். திறந்த வெளி காற்றில் அதிக நேரத்தை செலவிடுவதன் மூலம் குழந்தைகளுக்கு இத்தகைய பாதிப்பு நேராமல் பாதுகாத்துக்கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here