குடும்பத்தை மகிழ்ச்சியாக வைத்திருக்க பெண்ணால் தான் முடியும்

0

வீடு என்பது நமது அடைக்கலாம். நமது பாதுகாப்பு. நமது ஓய்வு. நமது ஆசுவாசம். நமது மகிழ்ச்சி. ஆனால் இத்தனையும் வழங்கக் கூடியவள் வீட்டை பராமரிக்கும் தலைவிதான். ஒரு வீட்டை அலங்கோலமாக வைக்கவும், அழகாக வைக்கவும் பெண்ணால்தான் முடியும். நாகரிக உலவில் ஆணும் பெண்ணும் வேலைக்குப்போய் சம்பாதிக்க வேண்டிய சூழலில் வீட்டை கவனிக்க எங்கே நேரமிருக்கு என்று பெண்கள் சலித்து கொள்வதை கேட்கிறோம். வீட்டை சுத்தம் செய்ய அரை மணி நேரம் போதும். ஆனால் மகிழ்ச்சியாக வைத்திருப்பது தனிக்கலை.

வீட்டின் மகிழ்ச்சி என்பது அதன் கலகலப்பான சூழல், எந்த ஒரு விஷயத்தையும் குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவது முதல் படியாகும். வேலை முடிந்து நாம் வீட்டுக்குப்போனதும் நமது செல்போன்கள், தொலைக்காட்சி போன்றவற்றை சற்று காத்திருக்க வைக்கலாம். வீட்டிலுள்ள பெரியவர்கள், கணவர் மற்றும் பிள்ளைகளிடம் அன்றைய நாள் எப்படி இருந்தது என கேட்கலாம். நமது அனுபவங்களை விவரிக்கலாம். முக்கிய செய்திகள் நிகழ்ச்சிகள் குறித்தும் பேசலாம். முக்கியமானது பேசுவதுதான். எதைப்பேசுகிறோம் என்பது அன்றைய தேவைக்கு ஏற்றது.

ஒருவருக்கொருவர் பேசாமல் மனதுக்குள் புகைந்து கொண்டிருப்பதால் தான் மாமியார்.,மருமகள் கணவன் மனைவி இடையே பிணக்குகள் ஏற்படுகின்றன. பேசித் தீர்க்க வேண்டிய சின்ன சின்ன பிரச்சனைகளை வன்மத்தாலும் அகம்பாவத்தாலும் வளர விடவே கூடாது. நாம் பேசுவது நமது குடும்பத்தினருடன் என்பதை எப்போதும் நினைவில் வைத்து கொண்டால் தேவையற்ற சர்ச்சைகளை தவிர்க்கலாம்.

அடுத்து உற்சாகம், சோர்வுடன் இருப்பவரை கண்டால் உற்சாகப்படுத்துங்கள். பிள்ளைகள் பாடச்சுமையாலும், பரீட்சை பயத்தாலும் சோர்ந்து இருப்பார்கள். கணவர் அலுவலக அரசியலால் கசந்து போய் வீட்டுக்கு வந்திருப்பார். மாமியார் உடல் ரீதியாக ஒருவலியால் எரிந்து விழுந்த கொண்டிருப்பார். இவற்றை ஒரு புன்னைகையுடன் எதிர் கொள்ளுங்கள். எந்த ஒரு பிரச்சனையும் விரும்பத்தகாத சூழ்நிலையும் அடுத்தவரின் அன்பாலும், அரவணைப்பாலும் மாறத் தொடங்கிவிடும் என்பதை மறந்து விடாதீர்கள். மிகச்சிறந்த நட்பையும், தோழமையையும் ஒரு பெண்ணால் தான் தனது குடும்பத்திற்கு வழங்க முடியும்.

இசை, ஆன்மிக வழிபாடு சிறிய விளையாட்டுகள், புத்தக வாசிப்பு என்று பலவகையிலும் பெண்ணால் வீட்டை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும். குறிப்பாக ருசிமிக்க நொறுக்கு தீனிகள், சுடச்சுட தரும் ஒரு கப் காபி, நாவுக்கு அதிகம் பழகாத புதிய வகை டிபன் என கவனமாக செயல்பட்டால் இல்லம் ருசிகரமாகவும் மாறும்.

சரி நாம் சோர்ந்து இருக்கும் போது என்ன செய்வது என்று கேள்வி வரும். சிறிது நேரம் கண்களை மூடுங்கள். தியானம் செய்யுங்கள். உங்கள் வீட்டையும், குடும்பத்தினரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும் ஒரு விசை உங்களிடம் இருப்பதை உணருங்கள். அந்த விசை உங்களுக்கும் உற்சாகத்தை அளிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here