கிழக்கிலிருந்து மாலைதீவுக்கு மணல் கடத்தல்; சாணக்கியன் எம்பி அதிர்ச்சி தகவல்

0

மாலைத்தீவு நாட்டில்; தீவொன்றை அமைப்பதற்காக, கிழக்கு மாகாணத்திலிருந்து மணல் திரட்டப்பட்டு, வருவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.சாணக்கியன் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

இந்த மணல் வர்த்தகத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைச்சர் ஒருவர் தொடர்புப்பட்டுள்ளதாகவும், மணலை கொண்டு செல்லும் நடவடிக்கைகளில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்புப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கைகளுக்கு ஆளுநர், ஒத்துழைப்புக்களை வழங்கி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த திட்டத்தின் ஊடாக, நாட்டிற்கு டொலர் கிடைக்குமானால், அது பிரச்சினை கிடையாது என கூறியுள்ள அவர், ஆனால், இந்த வர்த்தகத்தின் ஊடாக நாட்டிற்கு டொலர் கிடைக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆளுநர், சட்டத்திற்கு முரணாக செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

இந்த பிரச்சினையை விரைவில் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த பிரச்சினைக்கு பதிலொன்றை வழங்க உரிய அமைச்சருக்கு தாம் கோருவதாக ஆளும் கட்சியின் பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்திருந்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பதில்

இந்த மணல் வர்த்தகத்துடன், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எந்தவிதத்திலும் தொடர்புப்படவில்லை என்பதை தான் பொறுப்புடன் கூறிக் கொள்வதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிக்கின்றார்.

இலங்கை சட்டத்தின் பிரகாரம், உள்நாட்டு மணலை வேறு எந்தவொரு நாட்டிற்கும் அனுப்ப முடியாது என அவர் கூறுகின்றார்.

அவ்வாறு வெளிநாடுகளுக்கு மணல் அனுப்ப வேண்டும் என்றால், அதற்கு விசேட அமைச்சரவை பத்திரமொன்று அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டு, அதற்கு அனுமதி பெறப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.சாணக்கியன் வெளியிட்ட கருத்தானது, முற்று முழுதாக போலியானது தகவல் என விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிக்கின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here