கிண்ணியாவில் கைவிடப்பட்ட நிலையில் குழந்தை – பொலிஸார் தீவிர விசாரணை

0

கிண்ணியா – சமாவச்சதீவு பள்ளிவாசலுக்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட ஆண் குழந்தை யாருடையது எனக் கிண்ணியா பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

திருகோணமலை-கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமாவச்சதீவு பகுதியில் ஆண் குழந்தை ஒன்று கைவிடப்பட்ட நிலையில் (19) அதிகாலை மீட்கப்பட்டதாகத் தெரியவருகின்றது.

கிண்ணியா காவல் துறை நிலையத்திற்கு இராணுவ புலனாய்வுத் துறையினர் வழங்கிய தகவலையடுத்து குறித்த குழந்தை மீட்கப்பட்டதாகவும் பிறந்து ஒரு மாதத்திற்குக் குறைவாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கின்றனர்.

கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட ஆண் குழந்தையைக் கிண்ணியா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கிண்ணியா காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

கிண்ணியா-சமாவச்சதீவு பிரதேசத்திற்குப் பொறுப்பான குடும்ப நல உத்தியோகத்தரை கேட்டபோது தங்களுடைய பகுதியில் கர்ப்பிணி தாய்மார்கள் அனைவரும் தமது கிளினிக் வருவதாகவும் இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட எவரும் இல்லை எனவும் கிண்ணியாவில் வேறு பகுதியிலிருந்து கொண்டு வந்து குறித்த இடத்தில் வீசி விட்டுச் சென்றிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

ஆனாலும் வெளிநாடுகளிலிருந்து இங்கே வந்து திருட்டுத்தனமாக மறைந்திருந்து குழந்தையைப் பிரசவித்த பின்னர் தனது கௌரவத்தைப் பாதுகாக்கும் நோக்கில் இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டு இருக்கலாம் எனவும் மற்றுமொரு குடும்ப நல உத்தியோகத்தரொருவர் தமது சந்தேகத்தை வெளியிட்டார்.

இருந்தபோதிலும் கிண்ணியா பொலிஸார் குழந்தை மீட்கப்பட்ட இடத்தை அண்மித்த பகுதியில் உள்ள சிசிடிவி காணொளிகளைப் பெற்று வருவதாகவும் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here