ஐபிஎல் தொடரில் இருந்து காயம் காரணமாக மும்பை வீரர் சூர்யகுமார் யாதவ் விலகியுள்ளார்.
அவர் விரைவில் திரும்பி வருவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கடந்த 6 ஆம் திகதி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரரான சூர்யகுமார் யாதவுக்கு இடது முன் கை தசையில் காயம் ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து மருத்துவர்களின் அறிவுரையின்படி, கொல்கத்தாவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் அவர் விளையாடவில்லை.
மேலும் எஞ்சிய ஐபிஎல் போட்டிகளில் சூர்யகுமார் விளையாட மாட்டார் என மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
ஏற்கனவே பிளே ஆப் வாய்ப்பை மும்பை அணி இழந்துவிட்ட நிலையில், எஞ்சிய போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
சூர்யகுமார் தற்போது விலகியுள்ளது அவர்களுக்கு கவலையை அளித்துள்ளது.
இந்த நிலையில் சூர்யகுமார் வெளியிட்டுள்ள பதிவில், ‘உங்கள் எல்லோருடைய ஆதரவுடனும், நல்ல வாழ்த்துக்களுடனும் நான் விரைவில் திரும்பி வருவேன்.
என்னுடைய மும்பை இந்தியன்ஸ் குடும்பத்தினரை இந்த நேரத்தில் வெளியில் இருந்து உற்சாகப்படுத்துவேன்.
இந்த தொடரை சிறப்பாக முடிப்போம், களத்தில் நமது உண்மையான தன்மையை வெளிப்படுத்துவோம் என தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் சூர்யகுமார் 8 போட்டிகளில் 3 அரைசதங்களுடன் 303 ஓட்டங்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
