உடுப்பிட்டி பண்டகைப் பிள்ளையார் கோயிலில் தேர்த் திருவிழா

0

இயற்கை அழகு சூழ்ந்த சூழலில் எழுந்தருளி அருள்பாலிக்கும் யாழ்.வடமராட்சி உடுப்பிட்டி பண்டகைப் பிள்ளையார் கோயில் வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா இன்று சனிக்கிழமை(07-08-2021) சிறப்பாக நடைபெற்றது.

இன்று அதிகாலை விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து காலை-06.30 மணியளவில் கொடித் தம்ப பூசையும், அதனைத் தொடர்ந்து காலை-07.30 மணியளவில் வசந்த மண்டப பூசையும் இடம்பெற்றது. தொடர்ந்து பட்டாடைகளுடன் அழகுறப் பஞ்சமுக விநாயகப் பெருமான் உள்வீதியில் திருநடனத்துடன் எழுந்தருளினார்.

அதனைத் தொடர்ந்து காலை-08.15 மணியளவில் பஞ்சமுக விநாயகப் பெருமான் திருத் தேரில் ஆரோகணித்தார். சிதறு தேங்காய்கள் அடிக்கப்பட்டு விசேட தீபாராதனை இடம்பெற்றதைத் தொடர்ந்து அடியவர்களின் அரோகராக் கோஷம் முழங்க, காண்டாமணி, தவில், நாதஸ்வர முழக்கங்களுடன் காலை- 08.30 மணியளவில் திருத்தேர் பவனி ஆரம்பமானது.

தொடர்ந்து ஆண் அடியவர்களும், பெண் அடியவர்களும் இணைந்து விநாயகப் பெருமானின் திருத்தேர் வடம் தொட்டிழுத்தனர். திருத்தேர் இருப்பிடத்தை வந்தடைந்ததைத் தொடர்ந்து அடியவர்கள் அர்ச்சனை செய்து வழிபாடாற்றினர்.

அதனைத் தொடர்ந்து முற்பகல்-10.15 மணியளவில் திருத் தேரிலிருந்து பஞ்சமுக விநாயகப் பெருமான் அவரோகணம் செய்யும் திருக் காட்சியும் இடம்பெற்றது.

இதேவேளை, இவ்வாலய வருடாந்த மஹோற்சவம் கடந்த மாதம்-30 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகித் தொடர்ந்தும் பத்துத் தினங்கள் இடம்பெற்று வருவதுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை (08) காலை-07 மணியளவில் தீர்த்தோற்சவமும், இன்று பிற்பகல் கொடியிறக்க உற்சவமும் இடம்பெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here