ஈழத்தமிழர் சார் காலமாற்ற விஞ்ஞாபனங்களை வரவேற்கிறோம்- ஸ்ரீதரன்

0

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பிரதான கட்சிகள் வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனங்களில் ஈழத்தமிழர் சார் காலமாற்ற தீர்மானங்களை வரவேற்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தெரிவிக்கையில், தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கின்றது. உலகத்திலே வாழ்கின்ற 10 கோடி தமிழர்களில் கிட்டத்தட்ட ஏழு கோடி தமிழர்கள் எங்களுடைய தந்தையர் நாடானா தமிழ் நாட்டிலே வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்.

தமிழக சட்டமன்றத்துக்கான தேர்தலில் பல்வேறுபட்ட தேர்தல் விஞ்ஞாபனங்கள் பல பெரும்பான்மைக் கட்சிகளால் முன்வைக்கப்படுகின்றன.

ஏற்கனவே, அ.தி.மு.க. இலங்கை மீது பொருகாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும், இலங்கையின் குற்றங்கள் பற்றி விசாரிக்கப்பட வேண்டும், இலங்கையில் ஒரு நீதி நிலைநாட்டப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு சட்டசபையில் ஜெயலலிதா அம்மையார் இருக்கும்போது நிறைவேற்றியிருந்தார்.

இது வரலாற்றில் மிக முக்கியமாக தருணத்தில் எடுக்கப்பட்ட தீர்மானமாகவும் கருப்பொருளாகவும் உலகத்தில் உள்ள தமிழ் தலைவர்களால் பார்க்கப்பட்டது.

இப்போழுது, ஜெயலலிதாவின் இழப்பிற்குப் பிற்பாடு, அங்கிருக்கின்ற பெரும்பாலாக மக்கள் செல்வாக்குள்ள கட்சிகள். ஈழத் தமிழர்களுக்கான அடிப்படைப் பிரச்சினையை முன்வைத்துள்ளார்கள்.

தமிழர்களுக்கான ஒரு சுதந்திர நாடு, அவர்களுடைய சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான, அவர்களுடைய சுதந்திரத்தை அனுபவித்து வாழ்வதற்கான நிரந்தரத் தீர்வு. தமிழர்கள் மீது புரியப்பட்ட இனப் படுகொலை, போர்க் குற்றங்களுக்கு ஓர் சர்வதேச விசாரணை.

இலங்கையில் உள்ள தமிழர்கள் சிங்கள மக்களோடு சேர்ந்து வாழலாமா, இல்லையா என்பதைத் தீர்மானிப்பதற்கு ஒரு பொதுஜன வாக்கெடுப்பையும் கட்சிகள் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் தெரிவித்திருப்பதை நாம் பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் பார்க்கக் கூடியதாக இருந்தது.

அதுவொரு நல்ல விடயமாகும். இந்தியாவில் இருக்கின்ற அ.தி.மு.க., தி.மு.க., ம.தி.மு.க. அல்லது நாம் தமிழர் கட்சி என பல்வேறுபட்ட கட்சிகளினுடைய ஒன்றுபட்ட கோரிக்கையும் ஈழத் தமிழர்களுக்கு ஒரு நிரந்தரத் தீர்வு வேண்டும் என்பதேயாகும். ஈழத் தமிழர்கள் இந்த மண்ணிலே சுதந்திரமாக வாழவேண்டும் என்ற கோரிக்கையை அடிப்படையாக வைத்திருக்கிறார்கள்.

ஆகவே, இது மிக முக்கியமாக காலகட்டத்தினுடைய கோரிக்கையாகும். அவர்கள் முன்வைத்திருக்கின்ற பூரணமான கோரிக்கையை வரவேற்கிறோம். அதை அடித்தளமாக தமிழ்நாட்டில் இருக்கின்ற மூலை முடுக்கிலே வாழ்கின்ற அனைத்து தமிழ் மக்களிடமும் இது கொண்டுசெல்லப்பட வேண்டும். தமிழ்நாட்டிலே வாழ்கின்ற தமிழர்கள் அதைப் புரிந்துகொள்வதற்கான ஒரு காலகட்டமாக இருக்கும்.

ஆகவே, எங்களுக்குமான, எங்களுடைய பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு காலச்சூழலாக நாம் இதனைப் பார்க்கிறோம்.

எனவே, இந்தக் கட்சிகளுடைய காலமாற்ற விஞ்ஞாபனத்தை வரவேற்கிறோம். இந்தக் காலமாற்ற விஞ்ஞாபனம் எங்களுடைய மண்ணிலும் ஒரு மாற்றத்தைத் தரக்கூடியதாக தேர்தல் மாற்றங்கள் அமையவேண்டும் என நாம் அன்போடும் வாஞ்சையோடும் வரவேற்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here