
எலிசபெத் மகாராணியாரின் இளைய மகனான இளவரசர் ஆண்ட்ரூ மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2001 ஆம் ஆண்டு 17 வயதான வர்ஜீனியா கியூப்ரே என்ற பெண்ணை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக இளவரசர் ஆண்ட்ரு மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பில் அந்தப் பெண் தரப்பில் நியூயோர்க் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
எனினும், இந்த குற்றச்சாட்டை மறுக்கும் இளவரசர் ஆண்ட்ரூ, தன் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என நீதிமன்றில் கோரியிருந்தார்.
இந்நிலையில் எலிசபெத் மகாராணியாக பதவியேற்று 70 ஆண்டு நிறைவைக் கொண்டாடிய போது குறித்த வழக்கை நிறைவு செய்துக் கொள்ளுமாறு எலிசபெத் மகாராணி மற்றும் இளவரசர் சார்ள்ஸ் ஆண்ட்ரூவுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, தன் மீதான பாலியல் வழக்கை முடிவுக்கு கொண்டு வர இளவரசர் ஆண்ட்ரூ, குறித்த பெண்ணுடன் சமரசம் செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன் ஒரு பகுதியாக வர்ஜீனியா கியூப்ரே நடத்தி வரும் தொண்டு நிறுவனத்துக்கு 16 மில்லியன் டொலர் வழங்க அவர் சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, சட்டநடைமுறைகளை பின்பற்றி 30 நாட்களுக்குள் வழக்கை திரும்பப்பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.