இலங்கை வைத்தியசாலை பிணவறையில் தேங்கி கிடக்கும் சிசுக்களின் சடலங்கள்

0
The picture was taken from newborn to obstetrics and gynecology

மாத்தறை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் சுமார் 150 சிசுக்களின் சடலங்கள் மற்றும் உடல் உறுப்புகள் அடக்கத்துக்கு எடுத்துச் செல்லப் படாமல் ஒரு வருட காலமாக குளிரூட்டியில் குவிந்து கிடப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருக்கலைப்பு செய்த சந்தர்ப்பங்கள், இறந்தே பிறந்த சிசுக்கள், சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்ட உடல் பாகங்கள் உள்ளிட்டவை இவ்வாறு பிணவறையில் குவிந்து கிடப்பதாகத் தெரியவந்துள்ளது.

இவ்வாறு நீண்ட நாட்களாகச் சிசுக்களின் சடலங்கள் மற்றும் உடல் பாகங்கள் குளிரூட்டியில் வைக்கப்பட்டுள்ளதால் ஏனைய சடலங்களை வைக்க முடியாத நிலைமை உருவாகியுள்ளது.

பிணவறையின் குளிரூட்டிகள் சரியான முறையில் செயற்படாத காரணத்தால் சடலங்கள் பழுதடைந்தமையால் கடுமையான துர்நாற்றம் வீசுவதாகக் கூறப்படுகிறது.
பிணவறையில் ஆறு குளிரூட்டிகள் இருக்கின்ற போதிலும் அவற்றில் இரண்டு மட்டுமே சரியாகச் செயற்படுகின்றன. மேலும் குழந்தைகளுக்கான 4 குளிரூட்டிகள் பழுதுபார்க்க வேண்டிய நிலையில் உள்ளன என்று மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

ஏனைய வைத்தியசாலைகளில் இவ்வாறு குவிந்து காணப்படும் உடல்கள் மற்றும் உடல் உறுப்புக்களை சில மாதங்களுக்குப் பின்னர் குத்தகை அடிப்படையில் மலர் சாலைகளினால் பொறுப்பேற்று இறுதிச் சடங்கு செய்யப்படும் எனத் தெரிய வருகிறது.

ஆனால், மாத்தறை பொது வைத்தியசாலையில் சுமார் ஒரு வருடமாக இறுதிக் கிரியைகள் திட்டமிட்டபடி நடத்தப்படாமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
சடலங்கள் இவ்வாறு குவிந்து கிடக்கும் பிணவறைக்கு அருகில் கர்ப்பிணித் தாய்மார் சிகிச்சை பெறும் விடுதி காணப்படுவதாகவும், இது தாய்மாருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறெனினும், சடலங்கள் குவிந்து கிடப்பது பற்றி தமக்கு இதுவரையில் அறிவிக்கப்படவில்லை என வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் மல்காந்தி மெதி வக்க தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here