கொவிட்-19 வைரஸை தடுக்க தடுப்பூசி போடாத பயணிகள் விமானங்களில் பயணிக்க அமுலிலிருந்த கட்டுப்பாடு தற்போது நீக்கப்பட்டுள்ளது.
விமானங்களில் 75 பயணிகள் பயணிக்கும் வரம்பு நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, விமான நிறுவனங்கள் தேவையான எண்ணிக்கையில் தடுப்பூசி பெற்ற மற்றும் பெற்றுக்கொள்ளாத பயணிகளை ஒரே விமானத்தில் கொண்டு செல்ல முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
விமான நிலையத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் இந்த விடயத்தை ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இலங்கை தற்போது தடுப்பூசி பெற்ற சுற்றுலாப்பயணிகளுக்கும் பயணிகளுக்குமென முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளது.
ஆனால் தடுப்பூசி பெறாத பயணிகள் இன்னமும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.
இதேவேளை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
ஆனால் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத பயணிகள் அங்கு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை என்பதுடன் உடனடியாக தனிமைப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.