இலங்கை முழுவதும் அவசர நிலைமை பிரகடனம்! காரணத்தை வெளியிட்ட முக்கியஸ்தர்

0

இலங்கையில் அவசர நிலைமையை பிரகடனப்படுத்தியன் ஊடாக, ராஜபக்ச அரசாங்கம் சர்வதேசத்திற்கு தம்முடைய இயலாமையை வெளிப்படுத்தியுள்ளதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தேசிய பாதுகாப்பை உறுதிபடுத்துவதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்களுக்கு உணவுப் பொருட்களை பதுக்கி வைக்கும் வியாபாரிகளைக்கூட கண்டு பிடிக்க முடியாமல் போயுள்ளதாக அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

அரசாங்கம் தற்பொழுது அத்தியாவசிய உணவுகளுக்காக அவசர நிலைமையை பிரகடனப்படுத்தியுள்ளது. சரியான முகாமைத்துவம் இல்லாத காரணத்தினாலேயே அவசர நிலைமையை பிரகடனப்படுத்தும் அளவிற்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலைமையை கட்டுப்படுத்த தேவையான ஏற்பாடுகள் தற்போதய அரசியல் யாப்பில் காணப்படுகின்றது. எனினும் இந்த அரசாங்கம் அவசர நிலைமையை பிரகடனப்படுத்தியுள்ளது.

உண்மையாகவே தேசிய பாதுகாப்பை உறுதிபடுத்தவென ஆட்சிக்கு வந்தவர்களுக்கு அரசியல் யாப்பில் உள்ள ஏற்பாடுகளுக்கு அமைய உணவு பொருட்களை பதுக்கி வைக்கும் வியாபாரிகளை கண்டறிய முடியாமல் அவசர நிலையை பிரகடனம் செயதுள்ளனர்.

இவர்களின் இயலாமையை உள்நாட்டில் மட்டும் அல்லாமல் முழு உலகத்திற்கும் வெளிப்படுத்தியுள்ளனர். இன்று சர்வதேச ஊடகங்கள் அனைத்தும் நம் நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ள விடயத்தை அறிக்கையிட்டுள்ளன.

உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பஞ்சம் நிலவபோகின்றது. அத்தியாவசிய பொருட்களுக்காக நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன என செய்திகள் வெளியாகின்ன.

சர்வதேச ஊடகங்கள் மத்தியில் எங்களுடைய நிர்வாணத்தை அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ளது. இதனால் எம் நாட்டிற்கு வரவிருக்கும் சுற்றுலா பயணிகள் வருகைதரமாட்டார்கள். நாட்டிற்கு கிடைக்க இருந்த முதலீடுகளும் இனி கிடைக்காமல் போகும் என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here