இலங்கை மக்களிடம் பொலிஸார் விடுத்துள்ள வேண்டுகோள்

0

இலங்கையில் தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு சட்டவிதிகளுக்கு புறம்பாக விருந்துபசாரங்கள், கொண்டாட்ட நிகழ்வுகள் இடம்பெறுமாயின் அது தொடர்பில் 119 என்ற பொலிஸ் அவசர தகவல் பிரிவுக்கு அல்லது அருகில் இருக்கும் பொலிஸ் நிலையத்துக்கு தெரியப்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், போக்குவரத்து கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி திங்கட்கிழமை வரையிலும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில் மக்கள் ஒன்றுக்கூடுவது மற்றும் விருந்துபசார கொண்டாட்டங்களில் ஈடுபடுவது தடைச் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவர்கள் தொடர்பில் 119 என்ற பொலிஸ் அவசர தகவல் பிரிவுக்கு அல்லது அருகில் இருக்கும் பொலிஸ் நிலையத்துக்கு உடன் அறிவிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

இந்நிலையில் , நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்டதாக நேற்று காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்திற்குள் 1027 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது தலங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிங்கபுற பகுதியில் ட்ரோன் கமரா ஊடாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது தனிமைப்படுத்தல் சட்டவிதிக்கு புறம்பாக செயற்பட்டதாக ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல்மாகாணத்தின் எல்லை பகுதிகளில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள 14 சோதனைச் சாவடிகளில் முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கைகளின் போது , 1024 வாகனங்களில் பயணித்த 3153 பேர் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது எவ்வித தேவையும் இன்றி வருகைத்தந்திருந்த 60 வாகனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் , அவற்றில் பயணித்த 91 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இதன்போது , மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து செயற்பாடுகள் வழமைப்போன்றே நிறுத்தப்பட்டுள்ளதுடன் , பொது போக்குவரத்து செயற்பாடுகளும் இடம்பெறமாட்டாது.

மருந்தகங்களை தவிர ஏனைய வர்த்தக நிலையங்கள் திறக்கப்படமாட்டாது.

பொருள் விநியோக நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெறும்.அதற்கமைய விநியோக நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் தொடர்ந்தும் தங்களது சேவையை தொடர முடியும்.

இதேவேளை , அத்தியாவசிய சேவைகளை எவ்வித தடையுமின்றி தொடர்ந்தும் முன்னெடுக்க முடியும். ஏனையவர்கள் தேவையின்றி வீட்டைவிட்டு வெளியேறுவதை தவிர்த்துக் கொண்டு வீடுகளிலேயே இருப்பதே சிறந்தது என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here