இலங்கை சைவத் திருக்கோயில் திருக்கேதீஸ்வரம் வரலாறு…!!

0

புராதன இலங்கையின் சிறப்பு வாய்ந்த ஐந்து ஈஸ்வரங்கள் என அன்புடன் அழைக்கப்படும் ஐந்து சிவன் திருக்கோயில்களுள் திருக்கேதீஸ்வரம் ஒன்றாகும்.

தமிழில் ‘கந்த புராணம்‘ -என்ற புராண நூலிலும் இலங்கைத் தீவின் அழகும், அத்தீவில் நிலவிய சிவ வழிபாடும், மக்களின் வாழ்க்கை முறைகளும் சிறந்த முறையில் எடுத்தியம்பப்படுகின்றன. இராமாயணக் கதை இலங்கைத் தீவு பற்றிக் குறிப்பிடும் உண்மைகளைப் பார்ப்போம்:

திருக்கேதீஸ்வரத் திருக்கோயில் இராமாயண காவியத்திலேயே சிறந்த முறையில் குறிப்பிடப்படுகின்றது.
இராவணனின் மனைவியர் பலர். அவர்களுள், பேரழகு மிக்கவளும் , பட்டத்து ராணியாக விளங்கியவளுமான மண்டோதரி சிறந்த கற்புக்கரசி.

இவள் மயன் என்ற சிற்றரசனின் மகள். மயன் ஆட்சி செய்த இடத்தின் பெயர் மாதோட்டம் என்ற மாந்தை. மண்டோதரி சிறந்த சிவபக்தை என்பதும், அவள் மாதோட்டத்தில் இருந்த திருக்கேதீஸ்வரத் திருக்கோயிலில் சிவபெருமானை வழிபாடு செய்ததையும் பண்டைய இதிகாசங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன.

திருக்கேதீஸ்வரத் திருக்கோயிலில் பிருகு என்ற மகாமுனிவர் சிவபெருமானை வழிபட்டதை ‘மகா முனிவர்கள் வரலாறு‘ நமக்கு எடுத்துரைக்கின்றது.

நவக்கிரகங்களில் ஒருவரான கேது பகவான் இத் திருக்கோயிலில் சிவபெருமானை வழிபட்டுத் தமது சாபம் நீங்கப்பெற்றார் என்று ‘தக்ஷிண கைலாச மான்மியம்‘ என்ற பண்டைய வரலாற்று நூல் கூறுகின்றது.

கேது பகவான் பக்தியுடன் பூசித்ததாலேயே இத் திருக்கோயிலுக்குத் ‘திருக்கேதீஸ்வரம்’ என்னும் பெயர் உண்டாயிற்று.
இந்து மதத்தின் மிகப் பெரிய புராண நூலான ‘ஸ்கந்த புராண’த்தில் (இது முருகப்பெருமானின் வரலாற்றுச் சிறப்புகளைக் கூறும் நூல்) , முருகப்பெருமான் குற வள்ளியைத் திருமணம் செய்த திருத்தலம் இலங்கையிலுள்ள கதிர்காமம்தான் என்பதும் ஒரு கர்ண பரம்பரைக் கூற்று.)

மூன்று அத்தியாயங்களில் இலங்கையைப் பற்றியும், அத்தீவின் அழகைப் பற்றியும் அங்கே வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறைகளையும் பற்றி விளக்கிவிட்டு, இலங்கையின் முக்கியமான இரண்டு புராதனமான சிவன் திருக்கோயில்களான திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம் ஆகியவற்றின் தோற்றத்தைப் பற்றி நமக்கு எடுத்துரைக்கின்றது.

அப் புராணத்தின்படி, முன்னொரு காலத்தில், வாயுதேவனுக்கும், ஆதிசேடனுக்கும் யுத்தம் மூண்டபோது, ஆதிசேடனைத் தாக்குவதற்காக வாயுதேவன் மகா மேரு மலையின் சிகரங்களில் மூன்றை எடுத்து வீசினார்.

அந்தச் சிகரங்களில் இரண்டு இலங்கைத் தீவில் வீழ்ந்தன. ஒன்று திருக்கேதீஸ்வரமாகியது. மற்றொன்று, திருக்கோணேஸ்வரமாகியது. மகா மேரு மலை இறைவன் உறையும் புனிதமான மலையாகையால், சிவபெருமான் இத் திருத்தலங்களையும் தமது உறைவிடங்களாக்கிக் கொண்டார்.

ஆகையால், மகா மேரு மலையின் புனிதத்துவமும், பெருமையும் திருக்கேதீஸ்வரத் தலத்துக்கும் உள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்புகள் ‘தக்ஷிண கைலாச மான்மியம்’ என்ற பண்டைய தமிழ் வரலாற்று நூலிலும் விளக்கப்பட்டுள்ளது.
புராண காலத்தைக் கடந்து வரும்போது, அடுத்ததாக, சைவ சமயத்தின் சமய குரவர்களான திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் ஏழாம் நூற்றாண்டிலும், சுந்தர மூர்த்தி நாயனார் எட்டாம் நூற்றாண்டிலும் இந்தத் திருக்கோயிலுக்கு வருகை தந்து இத் திருக்கோயிலில் உறையும் திருக்கேதீஸ்வரரின் சிறப்பைப் பற்றியும், அதன் அருகே அமைந்துள்ள புனிதமான பாலாவித் தீர்த்தத்தின் மகிமைகளைப் பற்றியும் தமது தேவாரங்களில் பாடியுள்ளார்கள்.

இந்தியாவிலும், இலங்கையிலும் அமைந்துள்ள 275 தேவாரப் பாடல் பெற்ற சிறப்புத் தலங்களுள் இத் திருக்கோயிலும் ஒன்றாகும்.
ஈழத்திலுள்ள சிவன் திருக்கோயில்களுள், திருக்கேதீஸ்வரமும், திருக்கோணேஸ்வரமும் மட்டுமே இவ்வாறு பாடல்பெற்ற தலங்களாக விளங்குவது இவற்றின் தனிச் சிறப்பாகும்.

திருக்கேதீஸ்வரம் திருக்கோயில் இலங்கையில் மன்னார் மாவட்டத்தில், மன்னார் நகருக்கு ஏழு மைல் தொலைவில், மாதோட்டம் என்ற புராதனமான துறைமுக நகரத்தில் அமைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here