பலதரப்பு விவகாரங்கள் மற்றும் கடன் நிலைபேற்றுத்தன்மை தொடர்பான ஜனாதிபதி ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களாக புகழ்பெற்ற நிதி மற்றும் பொருளாதார நிபுணர்கள் அடங்கிய குழுவொன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, உலக வங்கியின் முன்னாள் தலைமைப் பொருளாதார நிபுணர் சாந்தா தேவராஜன், சர்வதேச நாணய நிதியத்தின் திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் ஷர்மினி கூரே ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களாக செயற்படுவார்கள். ஜனாதிபதியைச் சந்தித்த ஆலோசனைக் குழு உறுப்பினர்கள், சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை முன்னெடுத்தல் மற்றும் உரிய தேவைகளுக்காக தொடர்ந்தும் தொடர்பாடல்களைப் பேணுதல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடினர்.
சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர்புபட்டுள்ள இலங்கையின் நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தல், தற்போதைய கடன் நெருக்கடிக்குத் தீர்வுகாணல் மற்றும் இலங்கையின் நிலையான மீட்சிக்கு அவசியமான வழிகாட்டுதல்களை வழங்குதல் என்பன ஆலோசனைக் குழுவின் பொறுப்புக்களாகும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.