இலங்கையில் வீடு புகுந்த துப்பாக்கிதாரிகளால் 3 பிள்ளைகளின் தாய் சுட்டுக்கொலை!

0

களுத்துறை, மத்துகம பாலிகா வீதியில் நேற்றிரவு பெண்ணொருவர் தனது வீட்டினுள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக மத்துகம காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர், மூன்று பிள்ளைகளின் தாயான தில்ஷானி பெரேரா என்ற 38 வயதான ஒருவரென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி பெண் தனது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் வீட்டில் இருந்த வேளையில், உந்துருயொன்றில் வந்த இருவர் வீட்டுக்குள் நுழைந்து இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் நடத்தி தப்பிச்சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்த சந்தர்ப்பத்தில், குறித்த பெண்ணின் கணவர் பிள்ளைகளுடன் அறையொன்றுக்குள் சென்று தாழிட்டுக்கொண்ட நிலையில், வீடு புகுந்த துப்பாக்கிதாரிகள் அவ்வறையின் கதவை நோக்கியும் துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், குறித்த துப்பாக்கிதாரிகள் வீட்டின் பல இடங்களை நோக்கியும் துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

குறித்த பெண்ணின் கணவரை கொலை செய்யும் நோக்கிலேயே சந்தேகநபர்கள் பிரவேசித்துள்ளதாக இதுவரையான விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன், சம்ப இடத்திலிருந்து ரீ-56 ரக ஆறு தோட்டா உறைகள் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.

பாதாள குழு உறுப்பினரான மத்துகம ஷான் என்ற பாதாள உலக்குழு உறுப்பினரின் குழுவினரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவத்துக்கான காரணம் தெரியவராத நிலையில் மத்துகம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here