இலங்கையில் வாடகை மகிழுந்து சாரதி ஒருவரை அச்சுறுத்தி, அவரிடமிருந்த பணம் மற்றும் தங்க ஆபரணங்களுடன், குறித்த மகிழுந்தையும் கொள்ளையிட்ட நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கிருலப்பனை பகுதியைச் சேர்ந்த ஒருவரே நேற்று இவ்வாறு கைதுசெய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 9 ஆம் திகதி உந்துருளியில் பயணித்த குறித்த சந்தேகநபர், தம்மை காவல்துறை அதிகாரி என அடையாளப்படுத்தி, அந்த மகிழுந்தை வாடகைக்கு பெற்றுள்ளார்.
இதையடுத்து, குறித்த நபர், கூரிய ஆயுதம் ஒன்றைக் காண்பித்து, மகிழுந்தின் சாரதியை அச்சுறுத்தி, அவருக்கு கைவிலங்கிட்டு, மகிழுந்தை கடத்திச் சென்றுள்ளார்.
இதன்போது சந்தேகநபர், சாரதியிடமிருந்து, 30 ஆயிரம் ரூபா பணம் மற்றும் 3 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணம் என்பனவற்றுடன் மகிழுந்தைக் கொள்ளையிட்டு, அவரை இடைநடுவவே இறக்கிவிட்டு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், சந்தேகநபரைக் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.