இலங்கையில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு? அச்சத்தில் மக்கள் !

0

கடந்த மூன்று நாட்களாக சமையல் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க முடியவில்லையென லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.சிலிண்டர்களை நிரப்புவதற்கு தேவையான சமையல் எரிவாயு இருப்பு தம்மிடம் இல்லையெனவும் நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை (11) EPIC BALTA கப்பலில் கொண்டுவரப்பட்ட 3200 மெட்ரிக் தொன் LP சமையல் எரிவாயுவை நுகர்வோர் விவகார அதிகாரசபை நிராகரித்தது. Mercaptan உரிய தரத்தில் இல்லாமையே அதற்கு காரணமாகும். பங்களாதேஷின் மொங்லா துறைமுகத்திலிருந்து இந்த கப்பல் நாட்டை வந்தடைந்தது.

இந்நிலையில், 2000 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயுவை ஏற்றிய PERIKLIS கப்பல் நேற்று கொழும்பை அண்மித்தது. மாலைத்தீவிலிருந்நு இந்த கப்பல் நாட்டிற்கு வருகை தந்துள்ளது.

இந்த கப்பலிலுள்ள சமையல் எரிவாயுவின் தரத்தை பரிசோதிப்பதற்காக மாதிரிகளை பெற்றுக்கொண்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஷாந்த திசாநாயக்க தெரிவித்தார்.மாதிரிகள் பரிசோதனைகளுக்காக இரண்டு நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

மாதிரி பரிசோதனையின் பின்னர் அது நிபுணர் குழுவிற்கு அனுப்பப்பட்ட பின்னரே சமையல் எரிவாயுவை ஏற்றுக்கொள்வது தொடர்பில் தீர்மானிக்கப்படும்.
சந்தையில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையிலேயே இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

தம்மிடம் சமையல் எரிவாயுவும் கையிருப்பில் இல்லையென தெரிவித்துள்ள லிட்ரோ நிறுவனம் கடந்த 3 நாட்களாக எந்தவொரு சமையல் எரிவாயு சிலிண்டரையும் சந்தைக்கு விநியோகிக்கவில்லையென தெரிவித்துள்ளது.

இதேவேளை, 25 சதவீதத்திற்கும் குறைவாகவே தாம் சந்தைக்கு சமையல் எரிவாயு விநியோகிப்பதாக Laugfs Gas நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலைமையை உருவாக்கியமைக்காக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண மற்றும் கேஸ் நிறுவனத்தின் தலைவர் ஆகியோர் இராஜினாமா செய்ய வேண்டும் என தெரிவித்து ஐக்கிய தேசிய சுயதொழிலாளர் சங்கம் இன்று நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சிற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.

இதனிடையே, இரண்டு சமையல் எரிவாயு நிறுவனங்களுக்கும் எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு திர்மானித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை இன்று தெரிவித்தது.

நுகர்வோர் விவகார சட்டத்தை மீறி தமது உற்பத்திகளை சந்தைக்கு விநியோகித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகார சபையின் தலைவர் கூறினார்.

இதேவேளை, நாகானந்த கொடித்துவக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த எழுத்தாணை மனுவிற்கு சத்தியக்கடதாசி மூலம் லிட்ரோ நிறுவனம் பதிலளித்துள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபை அனுமதி வழங்கிய சிலிண்டர்களை மாத்திரம் சந்தைக்கு வழங்குவதாக லிட்ரோ நிறுவனம் அதன் மூலம் உறுதி வழங்கியுள்ளது.

சிலிண்டர்களில் உள்ள சேர்மானம் தொடர்பிலான விபரத்தை அதில் காட்சிப்படுத்தவும் நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here