இலங்கையில் புதுவருடப்பிறப்பிலும் தொடர்கின்றது மக்கள் போராட்டம்

0

இன்று சித்திரைப் புதுவருடப்பிறப்பை கொண்டாடும் வேளையிலும் இலங்கையில் மக்களின் போராட்டம் தொடர்கின்றது.

கொழும்பு – காலி முகத்திடலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்ட மக்கள் எழுச்சிப் போராட்டம் தமிழ் சிங்கள புதுவருடப்பிறப்பு தினமான இன்றும் 6 ஆவது நாளாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஜனாதிபதி செயலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில் “கோட்டா கோ கம” என்ற பெயர்ப்பலகைப் போன்ற பதாதை காட்சிப்படுத்தப்பட்டு, அங்கு கூடாரங்கள் அமைக்கப்பட்டு போராட்டம் தொடர்கின்றது.

போராட்ட களத்தில் புதுவருட நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றன. போராட்டத்திற்கு நாளுக்கு நாள் மக்களின் பங்களிப்பு அதிகரித்து வருகின்றது.

பல்லாயிரக்கணக்கான இளைஞர் , யுவதிகள் உள்ளிட்ட சகல தரப்பினரையும் இணைத்து ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் மிகவும் உணர்வு பூர்வமாகவும் , வலிமையானதாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி நாடளாவிய ரீதியில் தம்புள்ளையில் மு.ப 9 மணிக்கும், குருணாகலில் மு.ப 11 மணிக்கும், அம்பேபுஸ்ஸவில் நண்பகல் 12 மணிக்கும் கடவத்தயில் பி.ப 1.30 மணிக்கும், பருத்தித்துறையில் பி.ப ஒரு மணிக்கும், கிளிநொச்சியில் பி.ப 3 மணிக்கும், வவுனியாவில் பி.ப 5 மணிக்கும், அநுராதபுரத்தில் பி.ப 7 மணிக்கும், காலிமுகத்திடலில் பி.ப 3 மணிக்கும் கோட்டா கோ ஹோம் (வீட்டிற்குச் செல்லுங்கள் கோட்டா) என்ற கோஷத்தில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதேவேளை, இன்றைய தினம் (14) காலிமுகத்திடலில் காலை 8.41 மணிக்கு அனைத்து பாரம்பரிய முறைப்படி பால் காய்ச்சப்படும் என்றும், அதற்கு வருகைதருபவர்களை மஞ்சள்நிற ஆடையணிந்துவருமாறும் சமூக செயற்பாட்டாளர்கள் அழைப்புவிடுத்துள்ளனர்.

அத்தோடு இனங்களுக்கு இடையிலான ஒருமைப்பாட்டைக் காண்பிப்பதே இதன் நோக்கம் என்றும், மாறாக இதுவோர் கொண்டாட்டம் அல்ல என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here