இலங்கையில் பற்றி எரிந்த வீடு ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி!

0

கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மெனிக்கும்புர பிரதேசத்திலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீயில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று அதிகாலை 6.40 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த வீட்டில் இருந்த தந்தை, மகள் மற்றும் குறித்த வீட்டுக்கு வந்திருந்த மகளின் காதலன் என தெரிவிக்கப்படும் இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த 60 வயதான தாய் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த தந்தையான ஈஸ்வரதேவன், கட்டுகஸ்தோட்டை ரணவன வீதியில் வெற்றிலை விற்பனை செய்து வரும் நபராவார். இவரது 31 வயதுடைய மகள் ஈஸ்வரதேவன் மேனகா மற்றும் அவரது காதலன் என தெரிவிக்கப்படும் நபர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

தகட்டு கூரையால் வேயப்பட்ட ஒரு சிறிய வீட்டில் இவர்கள் வசித்து வந்துள்ளனர். தீ ஏற்பட்டதை அவதானித்த பிரதேசவாசிகள் குறித்த வீட்டின் கதவொன்றைத் திறந்து அங்கிருந்த ராணி அம்மா என அழைக்கப்படும் பெண்ணை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

தீக்காயங்களுடன் உயிரிழந்த யுவதியின் காதலன் வீட்டுக்கு வந்து தீ வைத்ததாக தெரிவிக்கப்படும் தகவலின் அடிப்படையில் கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ரசிக சம்பத்தின் அறிவுறுத்தலின் பேரில், பிரதான பொலிஸ் பரிசோதகர் குலசேன தலைமையிலான குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here