இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறையே இன்றைய பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் – சுரேஷ்

0

இலங்கையின் இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு நாட்டை ஆட்சி செய்தவர்களின் தவறான சிந்தனையும், ஆக்கபூர்வ திட்டங்கள் இன்றி தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டதுமே காரணமாகும் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க.பிறேமச்சந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் இன்றைய நிலை குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:

இலங்கை இன்று மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருப்பதானது வெறுமனே கடந்த இரண்டு வருடங்களாக நிலவி வரும் கொவிட்-19 மற்றும் ரஷ்ய-யுக்ரேன் சண்டையினால் மாத்திரமல்ல. ஜே.ஆர். ஜெயவர்த்தன காலம்தொட்டு மகிந்தராஜபக்ச காலம்வரையில், பல்லாயிரம் கோடி ரூபாயினை பல்வேறுபட்ட நாடுகளிடமிருந்து அழிவு யுத்தத்திற்காக இவர்களால்; பெறப்பட்ட கடன்களினால் ஏற்பட்டதாகும்.

சுதந்திரம் அடைந்த காலம்தொட்டு, தமிழ் மக்களை அடக்குதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு, ஆக்கபூர்வ நடவடிக்கைகளில் ஈடுபடாமல், மக்களை அழிப்பதற்கும் அவர்களின் அசையும், அசையா சொத்துகளை அழிப்பதற்காகவும் எமது சகோதர இனமான சிங்கள இனத்தை தவறாக வழிநடத்தி, பெறப்பட்ட கடன்களே இன்று நாடு எதிர்நோக்கியுள்ள பாரிய பொருளாதார நெருக்கடிக்கு மூலகாரணமாகும்.

இதன் காரணமாக வடக்கு-கிழக்கு மிகப் பெருமளவில் சுடுகாடாக மாற்றப்பட்டது. மறுதலையாக கொழும்பு போன்ற இடங்களிலும் பாரிய குண்டுவெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றன. இவை அனைத்துமே இந்த நாட்டிற்குப் பேரிழப்புகள் ஆகும். இவை மாத்திரமல்லாமல், யுத்தத்தைக் கொண்டு நடாத்துவதற்காக இலங்கையின் முப்படையின் ஆளணிகளும்; பல இலட்சங்களாக அதிகரிக்கப்பட்டது.

இவர்களுக்கான ஆயுதங்கள், பெரும்பெரும் யுத்த டாங்கிகள், குண்டுவீச்சு விமானங்கள், ஹெலிகொப்டர்கள் என பல்லாயிரம்கோடி செலவில் ஆயுதங்களும் வெடிபொருட்களும் கடனாக வேண்டி குவிக்கப்பட்டது.

யுத்தம் முடிந்து இன்று பதின்மூன்று வருடங்களாகியுள்ள சூழ்நிலையிலும், முப்படைகளின் ஆளணியைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் இன்றுவரை ஆரம்பிக்கப்படவில்லை. மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட படையினருக்கு மாதாந்த சம்பளம் வழங்க வேண்டும், இறந்துபோன மற்றும் ஓய்வுபெற்ற இராணுவத்தினருக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும், நிறுவப்பட்டுள்ள படைத்தரப்பினரின் அனைத்து முகாம்களும் பராமரிக்கப்படவேண்டும் இவ்வாறு பாதுகாப்பு செலவீனங்கள் அதிகரித்துச் செல்கின்றதே தவிர, குறைப்பதற்கான வழி தென்படவில்லை.

யுத்தத்திற்குப் பின்னரான ஒவ்வொரு வரவு-செலவு திட்டத்திலும் பாதுகாப்புச் செலவீனம் அதிகரிக்கப்பட்டே வந்துள்ளது. ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஒவ்வொரு வரவு-செலவுத் திட்டத்திலும் அதனைச் சுட்டிக்காட்டியதுடன், இவை குறைக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தியது. ஆனால் அரசு எமது கருத்துகளை செவிமடுக்கவில்லை. யுத்தம் முடிந்ததன் பின்னரும் பாதுகாப்பிற்கான செலவீனம் இவ்வளவு எதற்கு என்று கேட்டபோது, யுத்தத்திற்காக வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக என்று பதில் சொல்லப்பட்டது.

யுத்தம் முடிந்து பதின்மூன்று வருடங்கள் கழிந்த பின்னரும் அதற்காக வாங்கிய கடன் செலுத்தி முடிக்கப்படாமல் இன்னமும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இன்று நாட்டில் எந்தவொரு அத்தியாவசியப் பொருளையும் இறக்குமதி செய்வதற்கான அந்நியச் செலாவணி கையிருப்பில் இல்லை என்ற ஒரு நிலை தோன்றியிருக்கிறது. இதன் காரணமாக, அத்தியாவசியப் பண்டங்கள் மாத்திரமல்லாமல், வாகனங்களுக்கும் மின்சக்தி உற்பத்திக்குமான எரிபொருள் இறக்குமதியோ, சமையலுக்கான எரிவாயு இறக்குமதியோ எதனையும் பெற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலைக்கு நாடு சென்றிருக்கிறது. விவசாயிகள் உழவு இயந்திரத்தை வயல்நிலங்களுக்குக் கொண்டு செல்வதற்கும் தமது விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் இடையூறாக டீசல் தட்டுப்பாடு நிலவுகிறது. மீனவர்கள் தமது படகுகளைக் கடலுக்குக் கொண்டுசெல்வதற்கும் தமது ஜீவனோபாய தொழிலை மேற்கொள்வதற்கும் இடையூறாக எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகின்றது.

பொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு ஏற்றி இறக்குவதற்கான போக்குவரத்து பார ஊர்திகளுக்கான எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. குடும்பத்தின் சமையலுக்குத் தேவையான எரிவாயுவுக்கும், மண்ணெண்ணெய்க்கும் தட்டுப்பாடு நிலவுகிறது.

எரிபொருட்களுக்கான விலைகள் மலைபோல் அதிகரித்த போதிலும் அதனைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து, கல்வி என்று அனைத்துத் துறைகளுமே ஸ்தம்பிதம் அடையும் நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலையோ எவரெஸ்ட் சிகரத்திற்கு ஒப்பாக உயர்ந்துள்துடன் பலபொருட்களைப் பெற்றுக்கொளள முடியாத நிலையும் உள்ளது.

இவற்றிற்கு இலகுவாகவோ உடனடியாகவேர் முழுமையான தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியாது. ஐக்கிய தேசியக் கட்சியிடமோ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிடமோ அல்லது ஜே.வி.பியிடமோ வேறு எந்த அரசியல் கட்சியிடமோ இதனை உடனடியாக மாற்றியமைப்பதற்கான மந்திரக்கோல்கள் கிடையாது.

இதுவரை வரம்புமீறி கடன்களைப் பெற்றுக்கொண்டமைக்கான காரணத்தை சிங்கள கட்சிகள் புரிந்துகொண்டிருக்கின்றனவா? என்ற கேள்வி பலமாக எழுகின்றது. இதுவரை வாங்கிய பெருமளவான கடன்கள் அனைத்தும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்காக அல்லாமல் அழிவுபூர்வமான நடவடிக்கைகளுக்காகவே வாங்கப்பட்டுள்ளது.

ஆகவே இதில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டுமாக இருந்தால், சரியான பொருளாதாரக் கொள்கைகளும், சரியான வெளிவிவகாரக் கொள்கைகளும் தெளிவான அரசியல் சித்தாந்தத்துடன் வகுக்கப்படவேண்டும்.

எமது நாட்டிற்கு மிகமிக அவசியமான அந்நியச் செலாவணியைப் பெற்றுக்கொள்வதற்கான வழிமுறைகளை சிந்திப்போமாக இருந்தால், இப்பொழுது இருக்கக்கூடிய தேயிலை ஏற்றுமதி, ஆயத்த ஆடை ஏற்றுமதி, சுற்றுலாத்துறை வருமானம், மனிதவள ஏற்றுமதி இவற்றினூடாக ஈட்டப்படும் அந்நியச் செலாவணிக்கு மேலதிகமாக, அதனைப் பெற்றுக்கொள்வதற்கான வழிமுறைகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.

இதில் முக்கியமாக ஏற்றுமதி சார்ந்த வெளிநாட்டு முதலீடுகளை உள்ளெடுப்பதற்கான வழிமுறைகள் பற்றி ஆராயப்படவேண்டும்.

பிரதானமாக 1.5மில்லியன் புலம்பெயர் தமிழர்களும் கணிசமான அளவு சிங்கள மக்களும் பல்வேறுபட்ட ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் வாழ்கின்றனர். இவர்களது முதலீடுகளைக் கொண்டுவர வேண்டுமாக இருந்தால், மாகாணசபைகளுக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டு, முதலீடுகளை உள்வாங்குவதற்கான அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு வழங்கப்படவேண்டும். 50கோடி, 100கோடி என முதலீடு செய்பவர்களுக்கு அதற்கான காணிகளை வழங்கி, உட்கட்டமைப்பு வசதிகளையும் செய்துகொடுப்பது, அத்துடன் குறிப்பிட்ட காலத்திற்கு அவர்களுக்கான வரிச்சலுகைகளை வழங்குவது போன்ற அதிகாரங்கள் மாகாணத்திற்கு இருக்க வேண்டும். அவ்வாறு செய்வதனூடாக மாத்திரமே இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பை அதிகரிக்க முடியும்.

ஆகவே எங்கு தவறுகள் விடப்பட்டதோ, அந்தத் தவறுகளில் இருந்து மீண்டு, அதைத் திருத்திக்கொண்டு புதிய கொள்கைகள் உருவாக்கப்படவேண்டும். சிங்கள பொருளியல் வல்லுனர்களும், புலமையாளர்களும் இனிமேலும் இனவாதத்திற்குள் மூழ்குவதை விடுத்து யதார்த்த சூழ்நிலைகளைப் புரிந்துகொண்டு, நாட்டின் பன்முகத்தன்மை, ஏனைய தேசிய இனங்களின் பலங்கள், பலவீனங்கள் இவற்றையும் புரிந்துகொண்டு, முதலீடுகளை உள்வாங்குவதற்கான திட்டங்களை மேற்கொள்ள முன்வரவேண்டும். இவற்றை விடுத்து, சரியான சிந்தனைகளோ, கொள்கைகளோ இல்லாத ஆட்சி மாற்றங்களோ தமிழினத்தை அழிப்பதற்கான நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துக்கொண்டு நாட்டின் பொருளாதாரத்தைச் சீராக்கலாம் என்ற எண்ணங்கள் சரியான பலாபலன்களைத் தராது என்பதை அனைவரும் உணர்ந்துகொள்வது அவசியம்.

சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிறுவுவதற்காக இந்த நாட்டின் பொருளாதாரத்தை அதலபாதாளத்திற்குள் தள்ளிய பொறுப்பை அனைத்து சிங்கள கட்சிகளும் ஏற்றுக்கொண்டு, அவற்றிலிருந்து விடுபட்டு தெளிந்த சிந்தனையுடன் மாற்றங்களை உருவாக்க முன்வரவேண்டும்.

அதே சமயம், மிகச் சிறிய நாடான இலங்கைத் தீவிற்கு மிகப் பிரமான்டமான இவ்வளவு படையணியினர் தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு, அதனை நாட்டின் தேவைக்கேற்ப குறைப்பதன் மூலம் பல்லாயிரம் கோடி ருபா விரயம் ஆவதைத் தவிர்த்து ஆக்கபூர்வமான தொழில்களில் முதலீடுகளை மேற்கொள்ள முடியும்.”என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here