இலங்கையில் கடவுச்சீட்டு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது இன்று தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இந்த தகவலை அறிவித்துள்ளது.
கணனி கட்டமைப்பில் மீண்டும் திடீர் கோளாறு ஏற்பட்டுள்ளதன் காரணமாக குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
கணனி கட்டமைப்பில் மீண்டும் திடீர் கோளாறு ஏற்பட்டுள்ளதன் காரணமாக தலைமை அலுவலகம் உள்ளிட்ட ஏனைய கிளை அலுவலங்களிலும், கடவுச்சீட்டுகளை பெறுவதற்கான ஒரு நாள் மற்றும் சாதாரண சேவைகளின் அடிப்படையிலான விண்ணப்பங்கள் இன்று ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயினும் ஏனைய சேவைகள் இன்று பி.ப. 12.30 வரை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த செவ்வாய்க்கிழைமை (03) திணைக்களத்தின் கணனி வலையமைப்பு கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நேற்றையதினம் (04) சேவைகளை இடைநிறுத்த தீர்மானித்திருந்த நிலையில், அது சீரமைக்கப்பட்டு, நேற்று (04) செயற்பாடுகள் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில் மீண்டும் கணனிக் கட்டமைப்பில் இவ்வாறு கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளாமை தொடர்பில் பத்தரமுல்லையிலுள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு முன்னால் பிரதான வீதியை மறித்து சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் இதன் காரணமாக குறித்த பகுதியில் போக்குவரத்து ஸ்தமப்பிதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.