இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 3 பேர் கொலை

0

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் மூன்று பிரதேசங்களில் மூன்று கொலைச் சம்பவங்கள் பதிவாகி உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தொடங்கொடை, வெலிவேரிய மற்றும் எல்ல ஆகிய பிரதேசங்களிலேயே குறித்த கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

தொடங்கொடை, கஜுதூவ பிரதேசத்​தில் குடும்பத் தகராறு காரணமாக கணவன் தனது மனைவியை பொல்லு ஒன்றால் தாக்கி கொலை செய்துள்ளார்.

நேற்று காலை வேளையில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

46 வயதுடைய அதே பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலையாளி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தொடன்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, வெலிவேரிய, நேதுன்கமுவ பிரதேசத்தில் பேரன் தனது பாட்டியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.

நேற்றிரவு குறித்த கொலை சம்பவம் இடம்பெற்ற நிலையில் 74 வயதுடைய நேதுன்கமுவ பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான பேரன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் வெலிவேரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, எல்ல பொலிஸ் பிரிவின் உடுவர தோட்டம், மேல் பிரிவு பிரதேசத்தில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக படு காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நால்வரில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

28 வயதுடைய நேபியர் தோட்டம் மேல் பிரிவை சேர்ந்த இளைஞன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோதலுக்கான காரணம் இதுவரை தெரிய வராத நிலையில் எல்ல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here