இலங்கையில் ஒமிக்ரொன் கொவிட் திரிபு தொற்று உறுதியான முதல் நபர் அடையாளம்!

0

இலங்கையிலும் ஒமிக்ரொன் கொவிட் திரிபுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

தென் ஆபிரிக்காவிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர் ஒருவருக்கே இவ்வாறு ஒமிக்ரொன் கொவிட் திரிபு தொற்று உறுதியாகியுள்ளதாக பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நபர் நாட்டை வந்தடைந்த போது விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையின் பெறுபேறுகளை ஆராய்ந்தபோது அவருக்கு ஒமிக்ரொன் திரிபு தொற்று உறுதியானதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஒமிக்ரொன் கொவிட் திரிபு தொற்றுக்குள்ளான நபரொருவர் முதல் முறையாக கடந்த நவம்பர் 26 ஆம் திகதி தென் ஆபிரிக்காவில் அடையாளம் காணப்பட்டார்.

இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தென்னாபிரிக்கா, பொத்ஸ்வானா, லெசோதோ, நமீபியா, சிம்பாப்வே மற்றும் சுவாஸிலாந்து ஆகிய ஆபிரிக்க நாடுகளிலிருந்து இலங்கை வர, கடந்த நவம்பர் 27 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் தடை விதிப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.

அவ்வாறே, மேற்குறித்த நாடுகளிலிருந்து அன்றைய தினத்திலிருந்து 14 நாட்களுக்குள் இலங்கை வந்த சுற்றுலா பயணிகள் தொடர்பான தகவல்களையும் சுகாதார அமைச்சு திரட்டியதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞான பிரிவின் பிரதானி விசேட வைத்தியர் சமித கினிகே தெரிவித்தார்.

இவ்வாறு நாட்டுக்கு வந்தவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் அவர்களின் உடல்நலம் குறித்தும் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டிருந்தது. அதற்கமைய, அவர்களில் எவருக்கும் இதுவரை தொற்று உறுதியாகவில்லை.

இந்நிலையில், வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், மரபணு சோதனைக்காக குறித்த மாதிரிகள் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டன.

அதன்போது, மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின்போதே, தென் ஆபிரிக்காவிலிருந்து நாட்டுக்கு வந்த இலங்கையர் ஒருவருக்கு ஒமிக்ரொன் கொவிட் திரிபு தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

அவர் தனிமைப்படுத்தலில் இருந்தவர் என்பதால் வீண் அச்சமடைய தேவையில்லை என்றும், அவரது குடும்பத்தினரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி கொவிட் பரிசோதனைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here