இலங்கையில் எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய நியமிக்கப்பட்ட விசேட நிபுணர் குழு, விசாரணைகளை நிறைவு செய்துள்ளது.
இந்த தகவல்கள் அடங்கிய அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக அந்த குழுவின் தலைவர் சாந்த வல்பலகே தெரிவித்துள்ளார்.
இதற்கமைய அடுத்த வாரத்திற்குள் குறித்த அறிக்கையை வெளியிட முடியும் என அவர் குறிப்பிட்டார்.
எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் இதுவரையில் லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனங்களின் தலைவர்கள், உயர்மட்ட அதிகாரிகள் உள்ளிட்ட சகல தரப்பினரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
எரிவாயு நிறுவனங்கள், களஞ்சியசாலை வளாகங்கள், எரிவாயு விநியோக நிலையங்கள் மற்றும் எரிவாயு விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் பதிவான இடங்களிலும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அத்துடன் எரிவாயுவின் செறிவு தொடர்பிலும் இரசாயன பகுப்பாய்வு நடத்தப்பட்டுள்ளதாக எரிவாயுவுடன் தொடர்புடைய வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட நிபுணர் குழுவின் தலைவர் சாந்த வல்பலகே தெரிவித்தார்.
இதற்கமைய, அடுத்த வாரம் வெளியிடப்படவுள்ள அறிக்கையில் எரிவாயு வெடிப்புக்களுக்கான காரணங்கள் மற்றும் அவற்றை தடுப்பதற்கான பரிந்துரைகள் என்பன வெளிப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.