இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிராக பேரணி

0

அரசாங்கம் நாட்டு மக்களுக்கு சுமையை ஏற்படுத்தும் வகையில் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தி இன்று செவ்வாய்கிழமை பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தது.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கட்சி அலுவலகத்திலிருந்து பாராளுமன்றம் வரை வாகனப் பேரணியூடாக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன் போது ‘ எரிபொருள் விலையை குறைத்து மக்களுக்கு வழங்குங்கள்’ , ‘இப்போது சந்தோஷமா’ என்ற வசனங்கள் எழுத்தப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்தோடு எரிபொருள் விலை அதிகரிப்பினால் சகலரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை காண்பிக்கும் வகையில் , ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் , டிரெக்டர், முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள், சிறிய ரக வாகனங்கள் உள்ளிட்ட வெவ்வேறு வாகனங்களில் பாராளுமன்ற வளாகத்திற்குள் பிரவேசித்தனர்.

தொழிலுக்கு செல்லும் பெருமளவான இளைஞர்கள் மோட்டர் சைக்கிள்களையே பயன்படுத்துகின்றனர். இவ்வாறு ஒவ்வொரு துறையுடன் தொடர்புடையோர் எதிர்கொண்டு நெருக்கடிகள் தொடர்பில் அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டுவதற்கே அவர்கள் உபயோகிக்கும் வாகனங்களில் நாம் பேரணியாக செல்கின்றோம் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தார்.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ,

எரிபொருள் விலை அதிகரிப்பு, முறையற்ற தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் , உரப் பற்றாக்குறை உள்ளிட்ட பல விடயங்களுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர்களால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

விவசாயிகள் முதற்கொண்டு அரச சேவையாளர்கள் உள்ளிட்ட சகலரும் அதரவற்றோராகியுள்ளனர்.

இவ்வாறான சூழலில் மக்களுக்கு முறையான தீர்வொன்றையோ நிவாரணத்தையோ வழங்க அரசாங்கத்திற்கு முடியவில்லை என்றால் விட்டுச் செல்லுமாறு வலியுறுத்துகின்றோம்.

இதற்கு சிறந்த மாற்று வழி ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரமேயாகும். எம்மால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு வாக்களிப்பவர்களைக் கொண்டு யார் தேசப்பற்றாளர்கள் , யார் சூழ்ச்சிக்காரர்கள் என்பதை தீர்மானிக்க முடியும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here