இலங்கைக்கு மீண்டும் சூனியமான சுற்றுலாத்துறை

0

இலங்கையின் பிரதான வருமான மார்க்கமாக காணப்படும் சுற்றுலாத்துறை, 2019ம் ஆண்டு முதல் பாரிய வீழ்ச்சியை நோக்கி நகர ஆரம்பித்தது.

2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் திகதி நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதலை அடுத்து, இலங்கையின் சுற்றுலாத்துறை பாரிய சவாலை எதிர்நோக்கியது.

இவ்வாறான சவால்களை எதிர்கொண்ட இலங்கை, மீண்டும் சுற்றுலாத்துறையை கட்டியெழுத்த பாரிய பிரயத்தனங்களை மேற்கொண்டு, சுற்றுலாத்துறை வளர்ச்சி அடைய ஆரம்பித்த தருணத்தில் கொரோனா வைரஸ் மீண்டும் சுற்றுலாத்துறையை பாதிப்படைய செய்தது.

இவ்வாறான நிலையில், 2021ம் ஆண்டு இலங்கைக்கு மொத்தமாகவே 194,495 சுற்றுலா பயணிகள் மாத்திரமே வருகைத் தந்துள்ளனர்.

ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்ட 2019ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மாத்திரம், இலங்கைக்கு 244,239 சுற்றுலா பயணிகள் வருகைத் தந்திருந்தார்கள்.

கடந்த ஆண்டு முழுவதும் வருகைத் தந்த சுற்றுலா பயணிகளின் தொகையை விடவும், 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் வருகைத் தந்த சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகம் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

அதனைத் தொடர்ந்து, 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் 228,434 சுற்றுலா பயணிகள் இலங்கையை வந்தடைந்திருந்தனர்.

எனினும், இலங்கைக்கு முதல் தடவையாக 2020 மார்ச் மாதம் கொரோனா தாக்கியது.

இதையடுத்து, மார்ச் மாதம் இலங்கைக்கு வருகைத் தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 71,370 என்பதுடன், ஏப்ரல் மாதம் முதல் அந்த ஆண்டு நவம்பர் மாதம் வரை எந்தவொரு சுற்றுலா பயணியும் இலங்கைக்கு வருதைத் தரவில்லை.

2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் 393 சுற்றுலா பயணிகள் வருகைத் தந்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் 1682 சுற்றுலா பயணிகள் நாட்டை வந்தடைந்திருந்தனர்.

இதையடுத்து, இலங்கைக்கு வருகைத் தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்க ஆரம்பித்தது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் மாத்திரம் 89,506 சுற்றுலா பயணிகள் வருகைத் தந்திருந்தனர்.

இவ்வாறான நிலையில், 2022ம் ஆண்டு முதல் மாதத்தில் இலங்கைக்கு சுற்றுலா பயணிகள் வருகைத் தரும் விகிதம் அதிகரித்திருந்ததை அவதானிக்க முடிந்தது.

2021ம் ஆண்டு ஜனவரி மாதம் 1682 சுற்றுலா பயணிகளின் வருகையை சந்தித்த இலங்கை, இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மாத்திரம் 82,327 சுற்றுலா பயணிகள் வருகைத் தந்திருந்தார்கள்.

எனினும், இந்த ஆண்டும் இலங்கை சுற்றுலாத்துறையில் பாதிப்புக்களை எதிர்நோக்கும் அபாயத்தை சந்தித்துள்ளது.

இவ்வாறு இலங்கைக்கு வருகைத் தந்த சுற்றுலா பயணிகளில் அதிகளவானோர், தற்போது யுத்தம் இடம்பெற்று வரும் ரஷ்யா மற்றும் யுக்ரேன் ஆகிய நாடுகளிலிருந்தே வருகைத் தந்துள்ளனர்.

ரஷ்யாவிலிருந்து ஜனவரி மாதம் 13,472 சுற்றுலா பயணிகள் வருகைத் தந்திருந்ததுடன், யுக்ரேனிலிருந்து 7,774 சுற்றுலா பயணிகள் வருகைத் தந்திருந்தனர்.
இவ்வாறான பின்னணியில், அடுத்தடுத்த மாதங்களில் ரஷ்யா மற்றும் யுக்ரேன் ஆகிய நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைத் தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாகவே குறைவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ரஷ்யா மற்றும் யுக்ரேனுக்கு இடையிலான மோதல், இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதே உண்மையான விடயமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here