இலங்கைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள சீன கப்பல்

0

இலங்கையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சீனாவின் யுவான் வேங் – 5 ஆய்வுக் கப்பலின் இலங்கை பயணம் தொடர்பில், உடனடியாக உயர்மட்ட இராஜதந்திர தலையீடுகள் செய்யப்பட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னாள் சிரேஷ்ட இராஜதந்திரியான கலாநிதி தயான் ஜயதிலக்க இதனை தெரிவித்துள்ளார்.

அது வெளிவிவகார அமைச்சர் ஊடாகவோ அல்லது ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி ஒருவர் ஊடாகவோ அல்லது பிரதமரின் தலையீடாகவோ இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விசேட பிரதிநிதி, உடனடியாக சீனாவுக்கும், இந்தியாவுக்கும் சென்று, இருதரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய இடைநிலைத் தீர்வுக்கு வருவது அவசியமானதாகும் என கலாநிதி தயான் ஜயதிலக்க வலியுறுத்தியுள்ளார்.

சீனாவை கோபப்படுத்திக் கொண்டால், கடன் மறுசீரமைப்பு அல்லது வேறு கடனைப் பெற்றுக்கொள்வதில் பாரிய பிரச்சினை ஏற்படும்.

அதேநேரம், இந்தியாவை கோபப்படுத்திக்கொண்டால், அங்கும் பாரிய பிரச்சினை ஏற்படும். எமது அன்றாட வாழ்க்கைக்கு அவசியமானதை வழங்கியது இந்தியா என்ற நண்பராவார்.

எமக்கு அவசியமான சந்தர்ப்பத்தில், இந்தியா இவ்வாறாக நட்புறவை வெளிப்படுத்தும் நிலையில், இந்தியாவுக்கு பாதுகாப்பு பிரச்சினையை ஏற்படுத்தக்கூடிய சீனாவின் கப்பலுக்கு இடமளிப்பதாயின், அதனூடாக தாமாகவே குழியை வெட்டிக்கொண்டு, அதற்குள் இந்த அரசாங்கம் வீழ்ந்துள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில், முன்னாள் ஜனாதிபதியின் ஆசனத்தில் யார் அமர்வது என்பது குறித்து ஆராயாமல், நாட்டின் இராஜதந்திர உறவு குறித்து பரந்தளவில் சிந்தித்து செயற்பட வேண்டும் என முன்னாள் சிரேஷ்ட இராஜதந்திரியான கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.

இந்த சீனக் கப்பல், விமானத்தில் கொண்டுவந்து இறக்கப்படும் ஒன்றல்ல. இது அவசரமாக இடம்பெற்ற ஒன்றல்ல. இந்தக் கப்பலை அனுப்புவது குறித்து, சீனா விடுத்த கோரிக்கைக்கு, இலங்கையின் வெளிவிவகார அமைச்சு எழுத்துமூலம் இணக்கம் தெரிவித்தது.

இது, எந்த வகையிலான கப்பல் என்பதை வெளிவிவகார அமைச்சு அறிந்திருக்கவில்லையா? குறித்த கப்பலில் அதிநவீன இலத்திரனியல் கட்டமைப்பு உள்ளது.

இந்தியா இதனை எவ்வாறு நோக்கும். இந்தக் கப்பல், பயணிகளை ஏற்றிச்செல்லும் கப்பல் அல்ல. 2015 இல் சீனாவின் நீர்மூழ்கி கப்பல் ஒன்று தொடர்பில் இதுபோன்ற பிரச்சினை ஒன்று ஏற்பட்டது.

எனவே, இதுபோன்ற ஒன்று எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து முதலில் விசாரணை நடத்தி, அந்த நபர்கள் தொடர்பில் ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் சிரேஷ்ட இராஜதந்திரியான கலாநிதி தயான் ஜயதிலக்க மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here