இலங்கைக்கு உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள அவசர எச்சரிக்கை!

0

தற்போது நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகளுடன் செயற்பட்டால் அடுத்த வருடம் ஜனவரி மாதத்திற்குள் நாட்டில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 30,000 ஆக அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனம் அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது

நான்கு வாரங்களுக்கு கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவதன் மூலம் கொவிட் பரவலை கட்டுப்படுத்த முடியும் எனவும், இதனால் கொவிட் மரணங்களின் எண்ணிக்கையை 12,000 வரை குறைத்துக் கொள்ள முடியும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தற்போது காணப்படும் பயணக் கட்டுப்பாடுகளுடன் செப்டெம்பர் மாதத்திற்குள் நாளாந்தம் 6,000 பேர் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்படலாம்.

ஒக்டோபர் மாதத்திற்குள் 226 பேர் நாளாந்தம் கொவிட் தொற்றால் மரணிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விசேட வைத்திய நிபுணர்கள் குழு மற்றும் உலக சுகாதார ஸ்தாபனம் ஒன்றிணைந்து முன்வைத்துள்ள அறிக்கையின்படி, ஒக்டோபர் முதல் வாரத்திற்குள் நாளாந்தம் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைபெறும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை சுமார் 275 ஆக அதிகரிக்கக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த மே – ஜூன் மாதங்களில் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணக்கட்டுப்பாடுகளை மீண்டும் அமுல்படுத்துவதன் மூலம் நாள்தோறும் அடையாளம் காணப்படும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையை 1,000 பேர் வரை குறைத்துக்கொள்ள முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொவிட் தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்கு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரைக்கிறது.

இதற்கமைய, கொவிட் பரவலை கட்டுப்படுத்த அவர்கள் சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளனர்.

அதில் கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவது மிக முக்கிய விடயமாக முன்வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மாகாண பயணக் கட்டுப்பாடுகளுக்கு பதிலாக மாவட்டங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதனூடாக எதிர்வரும் ஜனவரி மாதமளவில், 18 ஆயிரம் கொரோனா மரணங்களை தடுக்க முடியும் என நிபுணர் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த மாகாணங்களுக்கு இடையேயான போக்குவரத்தை கட்டுப்படுத்துதல் மற்றும் அந்த செயற்பாட்டை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்கு குறுகியகால தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை அமுல்ப்படுத்துதல் என்பனவும் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here