இன்று சர்வதேச மகளிர் தினம்!

0

1789 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதித்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரான்ஸ் புரட்சியின் போது பெரிஸில் உள்ள பெண்கள் போராட்டம் நடத்தினர்.

ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கேற்ற ஊதியம், 8 மணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் போன்ற விடயங்களை அவர்கள் வலியுறுத்தினர்.

பிரான்ஸ் மன்னரின் மாளிகைக்கு முன்னால் ஒன்று திரண்ட பெண்களை அச்சுறுத்திய 2 காவலர்கள் பெண்களால் கொலை செய்யப்பட்டனர்.

தொடர்ந்து பெண்கள் நடத்திய போராட்டத்தின் நிமித்தம், மன்னர் லூயிஸ் பிலிப் பதவியிலிருந்து விலகினார்.

இதனை அடுத்து பிரான்ஸ் பெண்களின் ஆர்ப்பாட்டத்துக்கு ஐரோப்பா முழுவதும் ஆதரவு பெருகியது.

ஜேர்மன், ஆஸ்திரியா, டென்மார்க் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர்.

இதனை அடுத்து பிரான்ஸில் ஆட்சி அமைத்த லூயிஸ் பிளாங், பெண்களை அமைச்சரவை ஆலோசனை குழுவில் இணைத்ததுடன், அவர்களுக்கு வாக்குரிமை வழங்கவும் இணங்கினார்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு 1848ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் திகதி இடம்பெற்றது.

அதன் பின்னர் அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளில் இடம்பெற்ற பெண்களின் புரட்சிகளைக் கருத்தில் கொண்டு, மார்ச் மாதம் 8ஆம் திகதியைச் சர்வதேச மகளிர் தினமாக ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப்படுத்தியது.

இந்தநிலையில், வீரப் பெண் தலைமுறையின் வரலாற்றைப் பின்பற்றி இலங்கைப் பெண்கள் இன்று சமூகப் பொறுப்புடன் தொடர்ந்து முன்னேறி வருவதாக மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு நிலையான சமுதாயத்திற்காக தன் வாழ்நாள் முழுவதும் கருணை, ஆளுமை ஆகியவற்றைப் பகிரும் ஒரு பெண்ணின் பெருமையை ஒரு நாளுக்கு மட்டும் வரையறுக்க முடியாது.

மனித இனத்தை மாற்றிய அனைத்து தீர்க்கதரிசிகளின் பிறப்பு முதல், மனித இருப்பை அடையும் வரை அனைத்திற்கும் பெண்தான் காரணம் என்பது இரகசியமல்ல.

வீரப் பெண் தலைமுறையின் வரலாற்றைப் பின்பற்றி இலங்கைப் பெண்கள் இன்று சமூகப் பொறுப்புடன் தொடர்ந்து முன்னேறி வருகின்றனர்.

இந்த தைரியமான பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக அரசாங்கம் தொடர்ந்து பணியாற்றும்.

‘நிலையான எதிர்காலத்திற்கு இன்று பாலின சமத்துவம்’ என்ற சர்வதேச எண்ணக்கருவின் கீழ் கொண்டாடப்படும் இந்த முறை சர்வதேச மகளிர் தினத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் பாகுபாடுகளும் இலங்கை சமூகத்திலிருந்து துடைத்தழிக்கப்படும் தினத்தை உருவாக்குவதே தமது எதிர்பார்ப்பாகும் எனப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here