மேற்குவங்காள மாநிலத்தில் அமைந்துள்ள இந்திய-வங்காளதேச எல்லைப்பகுதியில் இந்திய எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் நேற்று வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
மேற்குவங்காளத்தின் நதினா மாவட்டத்தில் உள்ள எல்லைப்பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது வங்காளதேச எல்லையில் இருந்து சட்டவிரோதமாக 3 பேர் இந்திய எல்லைக்குள் நுழைவதை கண்டுபிடித்தனர்.
துரிதமாக செயல்பட்ட எல்லை பாதுகாப்பு படையினர் இந்திய எல்லைக்குள் நுழைந்த வங்காளதேசத்தினர் 3 பேரையும் பிடித்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பிடிபட்டவர்கள் மணிக் மண்டல் (32), அவரது மனைவி பிரியா மண்டல் (25), மற்றும் அவர்களது குழந்தை மனுஷக் மண்டல் (5) என்பது தெரியவந்தது.
வங்காளதேசத்தை சேர்ந்த மணிக் மண்டல் கடன் பிரச்சினை காரணமாக தனது குடும்பத்துடன் இந்தியாவுக்குள் வசிக்க திட்டமிட்டு மேற்குவங்காளத்தின் நதினா மாவட்டத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளார். இதையடுத்து, பிடிபட்ட 3 பேரும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.