இந்தியாவை வீழ்த்தி உலக டெஸ்ட் சம்பியனாகி வரலாற்று சாதனை படைத்தது நியூசிலாந்து

0

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் கடந்த 18 ஆம் திகதி ஆரம்பமானது.

முதல் 4 நாட்களில் 2 நாள் ஆட்டம் மழையால் முழுமையாக இரத்து செய்யப்பட்டது.

இதனிடையே முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 217 ஓட்டங்களையும், நியூசிலாந்து தனது முதல் இன்னிங்சில் 249 ஓட்டங்களையும் எடுத்தன.

32 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2 ஆவது இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய இந்தியா 5 ஆவது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 64 ஓட்டங்களை எடுத்திருந்தது.

அணித் தலைவர் விராட் கோலி 8 ஓட்டத்துடனும், புஜாரா 12 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.

மழை மற்றும் மோசமான வானிலையால் ஏறக்குறைய 2½ நாள் ஆட்டம் பாதிப்புக்குள்ளானதால் மாற்று நாளாக அறிவிக்கப்பட்டிருந்த 6 ஆவது நாளான ரிசர்வ் டே க்கு போட்டி நகர்ந்தது.

எனினும் இந்த டெஸ்ட் சமனிலையில் முடிவடையும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரிசர்வ் டே யில் நியூஸிலாந்து பந்து வீச்சாளர்கள் எதிர்பார்ப்புகளை மாற்றியமைத்தனர்.

ரிசர்வ் டே யான நேற்று இந்திய அணி தொடர்ந்து துடுப்பெடுத்தாடி 170 ஓட்டங்களுக்குள் நியூஸிலாந்து பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாது சுருண்டது.

அதிகபடியாக ரிஷாப் பண்ட் மாத்திரம் 41 ஓட்டங்களை பெற, ஏனைய வீரர்கள் அனைவரும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

2018 ஆம் ஆண்டு லொரட்ஸில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டுக்கு பிறகு ஒரு டெஸ்டில் இந்திய அணியில் எவரும் அரைசதம் அடிக்காதது இதுவே முதல்முறையாகும்.

பந்து வீச்சில் நியூஸிலாந்து அணி சார்பில் டிம் சவுதி 4 விக்கெட்டுகளையும், ட்ரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுகளையும், ஜேமீசன் 2 விக்கெட்டுகளையும், வாக்னர் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதன் மூலம் நியூசிலாந்து அணிக்கு 53 ஓவர்களில் 139 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இலக்கினை நோக்கி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய நியூஸிலாந்தின் டோம் லெதம் மற்றும் டேவோன் கான்வே ஆகியோரை அஷ்வின் ஆட்டமிழக்க செய்து வெளியேற்றினார்.

அதன் பிறகு அனுபவம் வாய்ந்த துடுப்பாட்டக்காரர்களான கேன் வில்லியம்சனும், ரோஸ் டெய்லரும் பொறுமையாக ஆடி வெற்றிப்பாதைக்கு அணியை கொண்டு சேர்த்தனர்.

இந்திய அணியினரின் பந்து வீச்சு வியூகங்கள் தோற்றுப் போக, நியூஸிலாந்து அணி இறுதியாக ரோஸ் டெய்லரின் பவுண்டரியுடன் 45.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 140 ஓட்டங்களை பெற்று வெற்றியை பதிவுசெய்தது.

நியூசிலாந்து அணி சர்வதேச அரங்கில் சாம்பியன் ஆவது இதுவே முதல் முறையாகும்.

இதற்கு முன்பு 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டு 50 ஓவர் உலக கிண்ண போட்டிகளில் இறுதிசுற்று வரை வந்து தோல்வியை தழுவிய நியூசிலாந்து அணி நீண்டகால ஏக்கத்தை தணித்துள்ளது.

போட்டியின் ஆட்டக்காரராக கைல் ஜேமீசன் தெரிவானார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here