இந்தியாவைப் புரட்டிபோடும் டவ்தே சூறாவளி…!

0

இந்தியாவில் தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான ‘டவ்தே’ சூறாவளி காரணமாக மராட்டியம் மற்றும் கர்நாடகத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கேரளா, கர்நாடகத்திலும் பலத்த மழை பெய்துள்ளது.

இதற்கிடையே சூறாவளி வடக்கு, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்தது. இந்த சூறாவளி மும்பை கடல் பகுதி வழியாக சென்று செவ்வாய்க்கிழமை குஜராத் மாநிலத்தில் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டது.

இந்த சூறாவளி குஜராத் மற்றும் மராட்டியத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை விடுத்தது.

சூறாவளியை எதிர்கொள்ள குஜராத் மற்றும் மராட்டிய மாநில அரசுகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தன.

மேலும் பேரிடர் மீட்பு படையினர், முப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டன.

இந்நிலையில் அதி தீவிரபுயல் நேற்று அதிகாலை மேலும் தீவிரமடைந்தது. சூறாவளி வேகமாக நகர தொடங்கியது. இதன் காரணமாக ஒருநாள் முன்னதாகவே நேற்று இரவு 9 மணி அளவில் குஜராத் மாநிலத்தில் போர்பந்தர்-மாகுவா இடையே கரையை நெருங்கியது. முன்னதாக மும்பை கடல் பகுதியில் 145 கி.மீ. தொலைவில் சூறாவளி நகர்ந்து சென்றது.

இதன் காரணமாக மராட்டியத்தில் தலைநகர் மும்பை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதலே மழை பெய்ய தொடங்கியுள்ளது.

மும்பையில் நேற்று 120 கி.மீ. வேகம் வரை சூறை காற்று வீசியது. இடைவிடாத மழையும் கொட்டி தீர்த்தது.

இதன் காரணமாக நாட்டின் நிதி தலைநகர் மும்பை நிலைகுலைந்து போனது.

முன்னதாக மராட்டியத்தில் மும்பை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் தற்காலிக மையங்களில் சிகிச்சை பெற்ற கொரோனா நோயாளிகள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு இருந்தனர்.

குஜராத் மாநிலத்தில் கரையை கடக்கும்போது, மணிக்கு 155 முதல் 165 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என கணிக்கப்பட்டு இருந்தது.

சூறை காற்று சுழன்று அடித்ததால் குஜராத்தை ‘டவ்தே’ சூறாவளி குதறி போட்டது.

இதற்கிடையே ‘டவ்தே’ சூறாவளி காரணமாக கர்நாடகத்தில் 121 கிராமங்கள் பெரும் பாதிப்பை சந்தித்தன. அந்த மாநிலத்தில் கடந்த 2 நாட்களில் 8 பேர் உயிரிழதுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here