இடைநிறுத்தப்பட்டிருந்த நல்லூர் வீரமாகாளி அம்மன் திருவிழா இன்று ஆரம்பம்

0

பல்நெடு வரலாற்றைத் தன்னகத்தே சுமந்த பாரம்பரியம் மிக்கதும், தமிழ் மன்னர்களால் போற்றி வழிபடப்பட்டதுமான வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருந் திருவிழா இன்று வெள்ளிக்கிழமை(16.07.2021) காலை-08 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளதாக மேற்படி ஆலயத்தின் முதன்மைப் பிரதமகுருவும், ஆதீன ஹர்த்தாவுமான சிவாச்சாரிய இளவரசு, சக்தி கிரியா வியாசர் ராஜஸ்ரீ சிவகமல்ராஜ் குருக்கள் தெரிவித்துள்ளார்.

ஆனிப் பெளர்ணமியைத் தீர்த்த உற்சவமாகக் கொண்டு 25 தினங்கள் இவ்வாலயத்தில் சிறப்பான மஹோற்சவங்கள் நடைபெற்று வந்தது. இந்த வருடம் கடந்த வைகாசி மாதம்-31 ஆம் திகதி மஹோற்சவப் பெருந் திருவிழா ஆரம்பமாகவிருந்த நிலையில் இயற்கையின் சீற்றத்தால் நாம் எதிர்கொண்டுள்ள கொரோனா எனும் கொடிய நோயினால் நாடு முடக்கப்பட்டது. இதனால், ஆலய உற்சவத்தை நடாத்த முடியாத நிலை தோற்றுவிக்கப்பட்டது.

மஹோற்சவப் பெருந் திருவிழாவுக்கான பூர்வாங்கச் செயற்பாடுகள் அனைத்தும் நடைபெற்று முடிந்திருந்தது. ஆனாலும், ஒரு குருக்கள் மட்டுமே ஆலயத்திலிருந்து பூசை வழிபாடுகளை ஆற்ற முடியும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்ட காரணத்தால் மஹோற்சவத்தை நடாத்த முடியாத நிலை ஏற்பட்டது.

அன்றைய நாளிலேயே ஜீலை மாதம்-16 ஆம் திகதி இவ்வாண்டுக்கான மஹோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் எனத் தீர்மானிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது கொரோனாத் தொற்று நோய் நிலைமையிலிருந்து நாடு சிறிதளவு விடுபட்டு, அடியவர்கள் ஆலயங்களில் வழிபாடு செய்வதற்குரிய நிலைமை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் அம்பிகையின் திருவருட் சக்தியினால் மீள ஒரு பட்சத்தில் மஹோற்சவத்தை நடாத்தக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here