இசைப்புயலின் இயக்குநர் அவதாரம்… முதல் படமே கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடல்!

0

ஆஸ்கர் விருது நாயகன் இசைப்புயல் ஏர்.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் “லி மஸ்க்“ எனும் குறும்படத்தை இயக்கியிருந்தார். இந்தத் திரைப்படம் தற்போது பிரான்ஸில் நடைபெறவுள்ள கேன்ஸ் சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட இருக்கிறது.

இந்திய மொழி சினிமாக்களில் கொடிக்கட்டிப் பறந்துவரும் இசைப்புயல் ஏர்.ஆர்.ரஹ்மான் “ஸ்லாம்டாக் மில்லியனர்“ திரைப்படத்திற்காக ஆஸ்கர் விருதைத் தட்டிச்சென்றார். இசையைத் தவிர இந்தியில் கடந்த 2020 இல் “அட்கன் சாட்சன்“ எனும் இசை தொடர்பான திரைப்படத்தைத் தயாரித்தன் மூலம் தயாரிப்பாளர் அவதாரத்தையும் எடுத்திருந்தார். தொடர்ந்து “99 சாங்ஸ்“ எனும் திரைப்படத்திற்கு திரைக்கதையையும் எழுதியிருந்தார்.

இந்நிலையில் தற்போது ஏர்.ஆர்.ரஹ்மான் தனது மனைவி சாய்ரா கூறிய ஒன்லைன் கதையை அடிப்படையாக வைத்து 36 நிமிடங்கள் ஓடக்கூடிய “லி மஸ்க்“ எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படம் ஒரு பெண் தன்னை நாடிவரும் ஆண்களை அவர்களின் வாசனை திரவியத்தை வைத்தே அடையாளம் கண்டுகொள்வது போன்ற திரைக்கதையைக் கொண்டுள்ளது என்றும் இதற்கான முழுக்கதையை குராச்சி ஃபீனிக்ஸ் என்பவர் எழுதியுள்ளதாகவும் நோரா அர்னிடேசர் மற்றும் கை பர்நெட் ஆகியோர் இதில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏர்.ஆர்.ரஹ்மானும் அவரது மனைவி சாய்ராவும் லி மஸ்க் எனப்படும் வாசனை திரவியத்தை அதிகம் விரும்புவதாகக் கூறப்படுகிறது. இதே பெயரில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் தற்போது பிரான்ஸ் நாட்டில் நடைபெறவுள்ள கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட இருக்கிறது. அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் கேன்ஸின் 75 ஆவது சர்வதேசத் திரைப்பட விழா வரும் மே 17 -28 வரை நடைபெற இருக்கிறது.

இதில் எக்ஸ்ஆர் எனும் பிரிவில் ஏர்.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இயக்கிய “லி மஸ்க்“ திரைப்படம் திரையிடப்பட இருக்கும் தகவல் தமிழ் ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here