இந்தியாவில் புதுச்சேரியில் ஆரோவில் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பெரம்பையில் சேறு நிறைந்த குழியில் விழுந்து 2 குழந்தைகள் பெப்ரவரி 8 ஆம் திகதி உயிரிழந்தனர்.
உயிரிழந்த சிறுவர்கள், பெரம்பை மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ராமு என்கிற சுரேஷ் மற்றும் இனித்தா ஆகியோரின் குழந்தைகள் லெவின் (5), ரோஹித் (3) என அடையாளம் காணப்பட்டனர்.
ராமுவின் வீட்டிற்கு பின்புறம், மோகன் என்பவரது காலி நிலத்தில் ஆழ்துளை கிணறு தோண்டப்பட்டுள்ளது.
அதில் சேறு நிறைந்த நிலையில் குழந்தைகள் குழியில் விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள், மூடப்படாத 4 அடி பள்ளத்தில் விழுந்து மூழ்கினர்.
பின்னர், அவர்கள் உள்ளே விழுந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வில்லியனூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் குழந்தைகள் இறந்துள்ளனர் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, உயிரிழந்த இரண்டு சிறுவர்களின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து ஆரோவில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குழந்தைகளின் பெற்றோர் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் இடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.