அரசாங்கத்திற்கு அதிர்ச்சி கொடுத்த வெளிநாடு வாழ் இலங்கையர்கள்

0

தற்போதைய அரசாங்கத்தை ஆட்சியில் இருந்து நீக்கி விட்டு, மக்கள் சார்பான அரசாங்கம் நாட்டை ஆளும் வரையில் ஒரு டொலரை கூட நாட்டுக்குள் அனுப்ப மாட்டோம் என மாற்றத்திற்கான வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த அமைப்பு, அவுஸ்திரேலியா, இத்தாலி, அமெரிக்கா உட்பட பல நாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்களை உறுப்பினர்களாக கொண்ட அமைப்பு.

ஜனாதிபதி நாட்டுக்கு மக்களுக்கு ஆற்றிய உரையில் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கு பதிலாக மாற்றவர்கள் மீது குற்றத்தை சுமத்த மேற்கொண்ட முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக அந்த சங்கத்தின் ஒருங்கிணைப்புச் சபையின் உறுப்பினர் மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.

முழு நாடும் மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி, மக்கள் இயல்பு வாழ்க்கையை குறைந்த வசதிகளுடன் கூட கொண்டு நடத்த முடியாத சூழ்நிலையில், நாட்டின் ஜனாதிபதி இதனை விட பொறுப்புடன் தலையீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்பது எமது அமைப்பின் நம்பிக்கை.

பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்வது ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தின் பொறுப்பு என்பதை ஏற்றுக்கொண்டு, இதற்கான அரசாங்கத்தின் தீர்வுகள் என்ன என்பதை நாட்டுக்கு கூறி இருக்க வேண்டும்.

இதனை விடுத்து மிக இலகுவாக சுற்றுலாப் பயணிகள், வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்கள் நாட்டுக்கு அனுப்பு பணத்தில் நாட்டின் அந்நிய செலாவணி நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வருதற்காக காத்திருப்பது நகைப்புக்குரிய விடயம்.

சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்தமை, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் நாட்டுக்கு பணத்தை அனுப்பாமை மற்றும் நாட்டு மக்கள் தமது பொறுப்புகளை தட்டிகழித்தமை போன்ற காரணங்களினால், நாட்டின் தற்போதைய நெருக்கடி ஏற்படவில்லை.

வெளிநாடுகளில் இருந்து டொலர்களை அனுப்பிய தொழிலாளர்களின் குடும்பங்கள் கூட, எரிவாயு, எரிபொருள் வரிசைகளில் நிற்பதுடன் மின்சாரம் இன்றி இருளில் இருக்கின்றனர்.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் அனுப்பிய பணத்தை நாடு வீழ்ச்சியடைந்த நேரத்தில் கூட தமது சுக போகங்களுக்காக பயன்படுத்திய தற்போது ஆட்சியில் இருக்கும் மற்றும் ஆட்சியில் இருந்த மோசடியான அரசியல்வாதிகள் இவற்றுக்கு பொறுப்பு கூற வேண்டும் எனவும் மனோஜ் கமகே மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here