ரஷ்ய போரினால் உக்ரைனில் இருந்து அகதிகளாக வெளியேறிய பொதுமக்கள் 1,00,000 பேரை அமெரிக்கா ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா போரானது உலக அளவில் பல விதமான பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகின்றது.
இந்நிலையில், உக்ரைனின் அண்டை நாடுகளான போலந்து, ருமேனியா, ஹங்கேரி, மற்றும் ஸ்லோவாக்கியா போன்ற நாடுகளில் அகதிகளின் நெருக்கடி அதிகரித்து வருகிறது.
ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட புள்ளிவிவர அடிப்படையில்,
உக்ரைனில் இருந்து கிட்டத்தட்ட 3.7 மில்லியன் மக்கள் உயிர் பிழைப்பதற்காக வெளியேறியுள்ளனர்.
அதில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் எனவும் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்ய போரினால் சொந்த தாய்நாட்டை விட்டு வெளியேறிய 1,00,000 உக்ரைனியர்களை அமெரிக்கா ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக ஜோ பைடன் மார்ச் 26 ஆம் திகதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து ட்விட்டரில் தகவல் வெளியிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஜனாதிபதியாக தான் பொறுப்பேற்றதில் இருந்து ராணுவ உபகரணங்கள் வாங்குவது தொடர்பாக இதுவரை 2 பில்லியன் அமெரிக்க டாலர்களை உக்ரைனுக்கு வழங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது உக்ரைனில் மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ள கூடுதலாக 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.