அமெரிக்காவில் கறுப்பின இளைஞரை சுட்டுக்கொன்ற பொலிஸார்…. பெரும் பரபரப்பு

0

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில் கடந்த ஆண்டு மே மாதம் 25 ஆம் திகதி ஜார்ஜ் பிளாய்ட் வயது 46 என்ற கறுப்பினத்தைச் சேர்ந்தவரின் கொலை தொடர்பில் விசாரணை மினசோட்டாவின் ஹென்னெபின் நகரில் உள்ள மாவட்ட கோர்ட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கியது.‌

இந்த விசாரணை தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

இந்த விசாரணையையொட்டி மினசோட்டா மாகாணம்‌ முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் மினசோட்டா மாகாணத்தில் கருப்பின வாலிபர் ஒருவர் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மினியாபொலிஸ் நகருக்கு அருகில் உள்ள புரூக்ளின் சென்டர் நகரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக கூறி கார் ஒன்றை தடுத்து நிறுத்திய பொலிஸார் காரை ஓட்டி வந்த கறுப்பினத்தைச் சேர்ந்த டான்ட் ரைட் (20) என்ற வாலிபரை கைது செய்ய முற்பட்டனர்.‌

ஆனால் டான்ட் ரைட் தான் எந்த தவறும் செய்யவில்லை என பொலிஸிடம் கூறிவிட்டு மீண்டும் காரில் ஏறி அமர்ந்தார்.

அவர் காரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட தயாரான சமயத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

துப்பாக்கி குண்டு காயத்துடன் டான்ட் ரைட் காரை சிறிது தூரம் ஓட்டி சென்றார். பின்னர் அந்த கார் மற்றொரு கார் மீது மோதி நின்றது.

இதையடுத்து பொலிஸார் சென்று பார்த்தபோது டான்ட் ரைட் காருக்குள் பிணமாக கிடந்துள்ளார்.

மேலும் அவருடன் காரில் பயணித்த பெண்ணொருவர் துப்பாக்கி குண்டு காயங்களுடன் துடித்துக்கொண்டித்த நிலையில் பொலிஸார் அவரை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்தனர்.

இதனிடையே கருப்பின வாலிபர் ஒருவர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் புரூக்ளின் சென்டர் நகர் முழுவதும் காட்டுத்தீ போல பரவியது.

இது அங்கு பெரும் போராட்டத்துக்கு வழி வகுத்தது. நூற்றுக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி டான்ட் ரைட் சாவுக்கு நீதி கேட்டு போராடத் தொடங்கினர்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டக்காரர்கள் கலைந்து செல்லும்படி பொலிஸார் ஒலிபெருக்கிகள் மூலம் எச்சரித்துள்ளனர்.

ஆனால் அதற்கு செவி சாய்க்காத போராட்டக்காரர்கள் போலீசாரின் வாகனங்கள் மீது கற்களை வீசி எறிந்து தாக்கினர்.

இந்த வன்முறை புரூக்ளின் சென்டர் நகர் முழுவதும் பரவி ஆங்காங்கே போலீசாரும் போராட்டக்காரர்களும் கடுமையாக மோதிக்கொண்டனர்.

மேலும் அந்த நகரில் தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here